Saturday, 8 November 2014

இரத்த வெறி.
இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரண்டு சிறுவர்களை சில நாட்களுக்கு முன்பாக இந்திய இராணுவம் சுட்டுக் கொலை செய்தது.  இன்றைய பத்திரிகைகள் வாயிலாக   அந்த சம்பவத்திற்கு இந்திய இராணுவம் வருத்தம் தெரிவித்திருப்பதை அறிந்து கொண்டேன். ["We admit a mistake was made... There was some information about a white car with terrorists. Obviously, the identity was mistaken in this case-Gen Hooda]. 32 புல்லட்களால் காரைத்  துளைத்தெடுத்துவிட்டு 'a mistake was made' என இலகுவான வார்த்தைகளால் அந்த சம்பவத்தை ஜெனரல் கூடா போல நாமும் கடந்து போகமுடியாது.

************************************************************

ஈழத்தில் இருந்து பெங்களூர் வந்த முதல் நாள் இரவே எனக்கு அறிமுகமானவன் ஆதில். எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தான். மார்பு வரைக்கும் நீண்ட தாடி வைத்திருப்பான். ஹாஸ்டலில் எனது அறைக்கு இரண்டு அறைகள் தள்ளி இருந்தவன் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் 'அருள் பாய்' என அன்பாக அழைத்து பேசுவான்.

அவனுடன் பேசிய இரண்டு சில நாட்களுக்குள் ஈழத்திற்கும் காஷ்மீருக்கும் உள்ள வலிகளின் தொடர்புகளை அறிந்து கொண்டேன். எண்ணிக்கையளவில் வேறுபட்டாலும் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் கொஞ்சம் கூட குறைவில்லாதது காஷ்மீர் என்பதைப் புரிந்து கொண்டேன்.


சில வருடங்களுக்கு முன்பாக இந்திய சுதந்திர தினத்திற்கு ஒரு வாரம் முன்பாக  'இந்திய சுதந்திரக் கொடியை காஷ்மீரில் எரித்து, நாங்கள் இந்தியாவின் பாகம் அல்ல' என்பதை தெரிவிப்போம் என ஒரு 'Event' -ற்கு 'Going' என அவன் கிளிக் செய்ய  அதைப் பார்த்த ஆதிலின் நண்பனும் தீவிர இந்திய உணர்வாளருமான எனது இன்னொரு நண்பன் அதை முகப் புத்தகத்தில் எழுத ஒரே நாளில் அனைவராலும் வெறுக்கப்படுபவனாகவும்  புறக்கணிக்கப்படுபவனாகவும் ஆனான் ஆதில்.


வேண்டுமென்றே 'Going' எனக் கிளிக் செய்யவில்லை. தவறுதலாக நடந்த சம்பவம் என அவன் சொன்னதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனது நீண்ட தாடியும், ஐந்து நேரத் தொழுகையும் அவர்களை அச்சுறுத்தியது.  ஒரு குழுவாக அவனது வீட்டிற்கு சென்ற எனது இந்திய நண்பர்கள் 'இந்தியாவில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் நீ பாகிஸ்தானுக்கு செல்லலாம்' என  அவனை எச்சரித்தனர். ' இந்தியாவும் எனது அயல் நாடு. பாகிஸ்தானும் எனது அயல் நாடு. சுதந்திர காஷ்மீர்தான் எமது தேசம். இரண்டு நாட்டின் இராணுவமும் எம்மைக் கொலை செய்கிறது'  என அவர்களைப் பார்த்து தீர்க்கமாக சொன்னான்.

'பாகிஸ்தான் இராணுவம் கொலை செய்யும். ஆனால், இந்திய இராணுவம் மருந்துக்கும் கொலை செய்யாது' என வாதிட்டுக் கொண்டிருந்த எனது ப்ரியமான நண்பர்களை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள பிரம்படி ஒழுங்கையில் இந்திய இராணுவத்தால் டாங்கி மூலம் நசுக்கிக் கொல்லப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் நினைவிற்கு வந்து போனார்கள்.


சில மாதங்களில் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை  இந்தியா  தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மார்ச் 30- 2011 நடைபெற்ற அந்தப் போட்டி தொடங்கும் போதே சரக்குடன் உட்கார்ந்த எனது நண்பர்கள் போட்டி முடிவடையும் போது முழுக் கீறலாகி மோன நிலைக்கு வந்திருந்தார்கள். 49.5- ஆவது ஓவரில் ஷகீர் கான் வீசிய பந்தை  மிஸ்பா உல் ஹக் ஓங்கியடிக்க எல்லைக் கோட்டிற்கருகாமையில் இலகுவாக 'கட்ச்'சினார்  கோலி. வென்றது இந்தியா.


முழுப்  போதையில் ஒரு பைக்கில் குறைந்தது மூன்று பேர்களாக இந்திய தேசியக் கொடியுடன் ஆதில் வீட்டிற்கு சென்ற நண்பர்கள் 'பாகிஸ்தானி மாக்கி சூத். பாகிஸ்தானி பஹன் சூத். பாரத மாதாகி ஜே' [ பாகிஸ்தானியர்கள் அன்னையுடன் உறவு வைத்துக் கொள்பவர்கள். பாகிஸ்தானியர்கள் சகோதரிகளுடன் உறவு வைத்துக் கொள்பவர்கள். பாரத மாதா வாழ்க. ] என சுமார் ஒரு மணி நேரமாக கோஷம் எழுப்பினர். இடைக்கிடை ஆதில் லவுடா என ஆரம்பித்து [ லவுடா- ஆண்குறி ஹிந்தியில்]   ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ் மலையாளம் என ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உள்ள கெட்ட வார்த்தையால் அவனைத் திட்டினார்கள்.


ஆதில் இந்தியாவை எவ்வளவு வெறுக்கிறானோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறான். இரண்டு தேசங்களும் சேர்ந்துதான் காஷ்மீரை மரணப் பள்ளத்தாக்காக வைத்திருக்கின்றன என்பது அவனின் தீர்மானமான வாதம். ஆனால், இந்தியாவை வெறுக்கிறான் ஆகவே அவன்  பாகிஸ்தானின் அனுதாபி, பாகிஸ்தானின்  உளவாளி என்பது எனது இந்திய நண்பர்களின் வாதம்.. 'இந்திய இராணுவமும் பாகிஸ்தான் இராணுவமும் அப்பாவி காஷ்மீர் மக்களைக் கொல்கிறது என்ற அவனின் வாதம் அவன் பெங்களூரில் இருக்கும் வரை செல்லுபடியாகவில்லை.


மணிப்பூரில் 'AFSPA' சட்டத்தால் தனது சொந்த சகோதரியை பறிகொடுத்து விட்டு இந்திய இராணுவத்தை கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டும் சோனம்  எனது உயிர் தோழி. Sister States எனப்படுகின்ற அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,நாகலாந்து, திரிபுரா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கொடிய  Armed Forces Special Powers Act எனப்படும் AFSPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட குறைந்தது ஒருவரையாவது சந்தித்துள்ளேன். அவர்களின் கதைகளும் ஈழத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

இந்திய இராணுவத்தின் தீவிர விசுவாசியான நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன். 'இந்தியன் ஆர்மி கிரேட்ல. தவறுதலா கொலை செஞ்சுட்டோங்கிறதை ஒத்துக்கொண்டாங்க. பாகிஸ்தான் ஆர்மினா ஒத்துப்பாங்களா ப்ரோ'

அது ஏனோ தெரியவில்லை எனது அனுபவத்தில் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் உள்ளவர்கள் இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ளவனின் வலியை அவ்வளவு இலகுவாக கடந்து போகிறார்கள். காஷ்மீர் பிரச்னையோ ஈழப் பிரச்னையோ அவர்கள் அந்த மக்களின் குரல்களை செவி மடுக்கத் தயாராக இல்லை. தாம் எதிர் பார்க்கும் குரல்களையே அவர்களும் வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். தாம் எதிர்பார்க்கும் 'version' களையே அவர்களிடமும் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
தொடரும்...Tuesday, 30 September 2014

'தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அதில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள்'-பிரசன்ன விதானகே 
பிரசன்ன விதானகேயை நான் எடுத்த பேட்டியை இங்கே பதிவு செய்துள்ளேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பேட்டியை  கொஞ்சம் தாமதமாகவே பதிவு செய்கிறேன். இந்தப் பேட்டியை நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
அன்புடன்,

அருளினியன். 


பிரசன்ன விதானகே, ஈழத் தமிழர்களின் வலிகளையும்  நெஞ்சுரத்துடன் படமாக்கிய சிங்கள இயக்குநர். ஈழத் தமிழர்களுக்கு சார்பான தனது நிலைப்பாட்டால், சிங்கள கடும்போக்குவாதிகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும், கொலை மிரட்டல்களையும் பெற்றவர்.  "ஆகாச குசும்'  என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்கிய திரைப்படம் "ஆகாய பூக்கள்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ஈழப் போர் நிகழ்ந்த முப்பதாண்டு காலத்தில்  யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட ஒரே சிங்கள மொழிமாற்றுப்படம் "ஆகாயப் பூக்கள்'தான்.

 "ஒப நத்துவா ஒப எகா' என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்கிய திரைப்படம் "வித் யு வித் அவுட் யு' என்ற பெயரில் ஆங்கில உப தலைப்புடன் அருண் தமிழ் ஸ்டுடியோவினால் இந்தியாவில் திரையிடப்பட்டது. படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இயக்குநர் பிரசன்ன விதானகேயை சந்தித்தேன்.

உங்களுடைய எல்லாப் படங்களிலும், இலங்கையின் சிறுபான்மை இனமான தமிழர்களின் நியாயமான பிரச்னையை ஏதோ ஒரு வகையில் பேசி இருப்பீர்கள். பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த உங்களால்  சிறுபான்மை இனத்தின் பிரச்னைகளை எவ்வாறு புரிந்து கொள்ள முடிகிறது...?

கலைஞன் என்று தன்னை உணர்பவனுக்கு, சிறுபான்மை மீதான சரியான புரிந்துணர்வும், அவர்களின் உணர்வுகளை, பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் திறனும் அவசியம். அது இல்லாதவனை கலைஞன் என்று சொல்ல முடியாது. இந்த சமூகத்தில் அதிகம் வன்முறைக்குள்ளாக்கப்படுபவர்களும், அடக்கப்படுபவர்களும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மையினரின் வலிகளைப் புரிந்து கொள்வதுதான் சமூக நீதிக்கான அடிப்படையாக அமையும். எனது எல்லாப் படங்களிலும் சிறுபான்மையினரின் வலியைப் பேசியிருப்பேன்.

இந்த சிறுபான்மை, பெரும்பான்மை என்பது தனியே இனங்களுக்கு மட்டும் அல்ல. ஒரு ஆண் படைப்பாளி, தமக்கு சிறுபான்மையாக விளங்கும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தில் வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்து இறந்த பல வறிய இளைஞர்களின் மரணங்களையும் நான் தாண்டி வந்துள்ளேன். இலங்கை இராணுவத்தில் இணைந்து இறந்து போன மேட்டுக் குடி வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்களை நாம் விரல் விட்டு எண்ணலாம்.  இந்த வறிய இளைஞர்களும் சமூகத்தில் வர்க்க அடிப்படையில் சிறுபான்மையினர்தான். அந்த வகையில் சிறுபான்மையான அந்த வறிய  இளைஞர்களின் வலியை எனது "டெத் ஆன் எ புல் மூன் டே' திரைப்படத்தில் பதிவு செய்து இருந்தேன்.

வடக்கு கிழக்கில் தமிழர்க்கு சிறுபான்மையாக இருந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட அவலத்தை எனது "ஆகஸ்ட் சன்' படத்தில் பதிவு செய்திருந்தேன். ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விஷயம் பிரதானமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை சிறுபான்மையினரின் வலிகள் பிரதானமானவை. அதை நான் சாகும் வரை பதிவு செய்வேன்.

ஆனால்,  சிறுபான்மையினத் தமிழர்களின் வலிகளைப் புரிந்து கொண்ட சிங்கள மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக அல்லவா இருக்கிறது?

சிறுபான்மைத் தமிழர்களின் வலிகளை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்பதை விட, அவர்களின் வலிகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் எனக் கூறுவதே சரியாக இருக்கும். ஊரையிழந்து உறவை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, அடையாளத்தையும்  இழந்து நிர்க்கதியாக இருக்கும் தமிழர்களின் வலிகளை ஒரே வார்த்தையில் புரிந்து கொண்டேன் என எப்படிக் கூற முடியும்...? பெரும்பான்மை இனமாக இருந்துகொண்டு ஈழத் தமிழர்களின் வலிகளை புரிந்து கொள்வதற்கும், சிறுபான்மை இனமாக அந்த வலிகளுடன் வாழ்வதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு, இல்லையா...? பெரும்பாலான சிங்கள மக்களால் ஈழத் தமிழர்களின் வலிகளை ஏன் புரிந்து கொள்ள முடிவதில்லை என்ற கேள்வி எனக்கும் எப்போதும் உண்டு. ஒரு படைப்பாளியாக இந்தக் கேள்விக்கான சரியான விடையை நான்தான் தேடிக்கண்டறிய வேண்டும்.

தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அந்த சங்கிலியில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள் என்ற உண்மையை சிங்களவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகள் போர் நிறைவுக்கு வந்த பின்பும் இன்னும் வேறு ஏதோ விதத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழர்களின் நியாயமான பிரச்னைகளை சிங்களவர்கள் புரிந்து கொண்டிருந்தால் ஈழம் இந்தளவு தூரம் எரிந்திருக்காது.

இலங்கையில் இன முரண்பாடுகள் எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது என நினைக்கிறீர்கள்?

ஒரு பிரச்னையை தமிழர்கள் ஒரு மாதிரியாகவும் சிங்களவர்கள் வேறு மாதிரியாகவும் பார்ப்பதில்தான் அனைத்து சிக்கல்களும் ஆரம்பிக்கின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் சிங்களவர்கள் தங்களை சிறுபான்மையாக உணர்கிறார்கள். அதனால் பயப்படுகிறார்கள். அந்த பயத்தை இலங்கை அரசியல்வாதிகள் ஊதிப்பெருப்பிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் சிங்களவர்கள், தமிழர்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள்.
தமிழர், சிங்களவர் என்ற பேதத்தைக் கடந்து மனிதர்களாக முன்நோக்கிச் செல்ல வேண்டும். எதிர்கால சந்ததியாவது அதை செய்ய வேண்டும்.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை தமிழ் அமைப்புகள் தொடங்கியபோது, தமிழருக்கு இருந்த பிரச்னைகள் அவர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் அப்படியே இருக்கிறதே?

இலங்கை அரசின் அரசியல் கொள்கைகளின் தவறால் உருவான விளைவுதான் விடுதலைப்புலிகள்.  ஆகவே விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என இலங்கை அரசு கூறுவதுபோல என்னால் கூற முடியாது. அரசியல் ரீதியான குறைகள், பாரபட்சங்கள் இருக்கும் போதுதான் அங்கே போராட்டம் முளைவிடும். இலங்கையில் சிறுபான்மை இனத்தால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்களுக்கிருந்த பிரச்னைகள் இன்னும் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழர்களின் கோரிக்கைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் உருவாகும். தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசால் வெல்லலாம் அதுவல்ல முக்கியம் தமிழர்களின் இதயத்தை வெல்லவேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

போராட்டம் ஆரம்பித்த காலத்தில் அவர்களிடம்  நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால், அவர்கள்  தமக்கான அரசியலை கட்டமைக்காமல் ஆயுதத்தை மட்டுமே நம்பியது தவறு.  அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்கு பின்பு, ஆயதக் குழுக்கள் மீதான உலகின் பார்வை மாறியதும் அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

தனிநாடு உட்பட, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
 
எந்தத் தீர்வாக இருந்தாலும் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கைக்குள்தான் எடுக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. விடுதலைப் புலிகளின் கொள்கைகளைப் பகுத்தறிந்து பேச நான் அரசியல் ஆய்வாளன் இல்லை. இன்றைய  ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. "நாங்கள் இன்று, எந்த உரிமையும் இல்லாமல் பிச்சைக்காரர்கள் போல இருப்பதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம்' என எனக்குப் பல இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.

2009 இல் இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அதை போர் வெற்றியாக சிங்கள மக்கள் கொண்டாடியதன் பின்னணியில் உள்ள உளவியலை எப்படி புரிந்து கொள்வது...

இலங்கை  ராணுவம் இறுதிப்  போரில் வெற்றி பெற்ற போது நான் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். கிரிபத்(பாற் சோறு) ஒரு கையிலும், இலங்கை தேசியக்கொடி இன்னொரு கையிலுமாக எம்மை வழிமறித்த பல சாதாரண சிங்கள மக்கள் என்னையும் அந்தக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ள வருமாறு அழைத்தனர். இலங்கைத் தீவின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருக்கும் போது, அதே தீவின் இன்னொரு பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் மன நிலையை உங்களைப் போல என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சிங்கள மக்களின் அந்த போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்தான், இறுதிப் போரின் பிறகான இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. 'எமது அழிவை நீங்கள் கொண்டாடினீர்களே...?' என எனது தமிழ் நண்பன் என்னிடம் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.  இறந்து போனவர்கள் எல்லாம் தமிழர்களாக இருந்தாலும் அவர்களும் இலங்கையின் பிரஜைகள் என்பதையும், அவர்களும் மனிதர்கள்தான் என்பதையும்  சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாதது உண்மையில் துரதிஸ்டவசமானது.


"வித் யூ வித் அவுட் யூ' படத்தில் நாயகியாக இந்தியாவை சேர்ந்த அஞ்சலி பாட்டீலை தேர்ந்தெடுத்த காரணம் என்ன?

இலங்கை தமிழ் பெண்ணையே அந்தப் படத்தில் நடிக்க வைக்க முயன்றேன். ஆனால், கடந்த 30 வருடங்களில் இலங்கையில் வெறும் 10 படங்கள்தான் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நாயகிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நான் தேடிய நாயகி எனக்குக் கிடைக்கவில்லை.  இந்தப் படத்தில் நாயகிதான் பிரதானம். அவரின் பார்வையில்தான் படம் நகரும். அப்போதுதான் நண்பர்கள் சொல்லி, அஞ்சலி பாட்டீலை சந்தித்தேன். நான் மனதில் நினைத்து வைத்திருந்த ஈழத்துப் பெண் போலவே இருந்தார். அவரை நடிக்க வைத்தேன்.

ஸ்ரீகர் பிரசாத்துடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஒரு படத்தின் கதாபாத்திரத்தின் மன உணர்சிகளைக்கூடத் தனது படத்தொகுப்புத் திறமை  மூலமாக சரியான முறையில் திரையில் பிரதிபலிக்க வைப்பார். இந்தப் படத்தில் நாயகன் மற்றும்  நாயகி பல காட்சிகளில்  கண்கள் மூலமாகத் தான் பேசிக் கொள்வார்கள். அதை அவர் படத்தொகுப்பு செய்திருக்கும் விதம் அற்புதம்

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

இறுதிப் போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற உயிரிழப்புகள் பற்றிய சரியான தரவுகள் யாரிடமும் இல்லாத நிலையில் இது சம்பந்தமாக கருத்துக் கூற விரும்பவில்லை.
இலங்கை  அரசின் போர்க் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்த உயிரிழப்புகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணையை விட, இலங்கைக்குள் அமைக்கப்படும் விசாரணைக் குழு அதிக பயன் தரும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழர்களின் இறந்தகாலத்தின் வடுக்களை அகற்றாமல் சுபீட்சமான எதிர்காலம் இல்லை.

பேரினவாத அரசின் பார்வை இப்போது இலங்கை முஸ்லிம் மக்கள் பக்கமாகத் திரும்பியுள்ளதே...

முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நடத்திய "பொது பலசேனா'வினர் தங்களை சிங்கள பௌத்தர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள். அமைதியின் வடிவமான பௌத்த பிக்குகள் ரவுடிகள் போல வன்முறையில் இறங்குவதை எப்படி ஏற்றுக் கொள்வது...? பௌத்த சிங்களவர்களின் பெயரால் இன்னொரு உயிரை எடுப்பதை பௌத்தர்கள் எம்மால் அனுமதிக்க முடியாது. பொது பலசேனா அமைப்பின்  வன்முறைகளுக்கெதிராக   இலங்கையின் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதில் எனது கையெழுத்தை இட்டுவிட்டுத்தான் இந்தியா வந்தேன். இந்த இனவாத அமைப்புகள் இன்னொரு கறுப்பு ஜூலையின் பக்கம் இலங்கையை நகர்த்தி செல்வதாக நான் அஞ்சுகிறேன். இலங்கைத் தீவு பல அழிவுகளைக் கண்டுள்ளது. எத்தனையோ தமிழ் அறிஞர்கள் போரினால் இலங்கையை விட்டு புலம் பெயர்ந்துள்ளனர். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு அது பெரிய இழப்பு. இனியும் இனவாதம் வேண்டாம். வன்முறை வேண்டாம். வன்மம் வேண்டாம். இனியும் இந்த அழிவுகள் வேண்டாமே... ப்ளீஸ்.

இலங்கை தமிழர்களுக்கு தீர்வாக நீங்கள் கருதுவது என்ன?

இலங்கை நாடானது அனைத்து இனத்திற்கும், மதத்திற்கும் பொதுவானது என நம்புபவன் நான். சிங்கள, தமிழ் மக்களிடையே உள்ள வேறுபாடுகளைத் விட அவர்களிடையே இருக்கும் கலாச்சார, பண்பாட்டு ஒற்றுமைகள் அதிகம். ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம உரிமை என்பதுதான் எனது கனவு. கணபதி ஐயா கடையில் யாழ்ப்பாணப்புகையிலை வாங்கி, சலீமுடன்  சேர்ந்து அருந்தும் இலங்கைதான் எனது கனவு. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படாவிட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இல்லை, சிங்களவர்களுக்கு கூட சரியான எதிர்காலம் அமையாது.Friday, 7 March 2014

ரஹ்மான்: என் ஏக இறைவன்.
'ரஹ்மானை இறைவன்னு எழுதாதடா', தப்பா நினைச்சுக்கப் போறாங்க என்றாள் என்னவள்.
 
இல்லம்மா, 'என்னை சந்தோஷப்படுத்தும் அனைவரும் கடவுளின் வடிவங்கள் . நீ கூட எனக்கு கடவுள் மாதிரிம்மா'  உன்னை கேசாதிப்பாதமா  பாடணும்மா.

 
கேசாதிப்பாதமா..? வாட்..?, கேசரி மாதிரி?
 
பெண் கடவுளர்களை கேசாதிப்பாதமா பாடணும்மா, நான் சொல்லல, புராணத்தில சொல்லி இருக்காங்க.

 
ஏதோ, வாயை வைத்தே உன் பிழைப்பு ஓடுது என்று சொல்லி சிரித்தாள்.
 
'வாய் இல்லாட்டி, உன்னை நாய் கொண்டு போயிடும்' என்பார் எனது அம்மா. அம்மா சொல்வது ஒரு extend இல் சரியாக இருக்கும். நான் அடிப்படையில் கொஞ்சம் ரொமாண்டிசைஸானவன். காதலிக்கும் விஷயங்களை கொஞ்சம் ரொமாண்டிசைஸ் செய்து என்னவளுடன் பேசுவது போலவே எழுதுவேன்.  ஆனால் ரஹ்மான் பற்றி எழுதியவை உண்மையானவை. அடி மனதில் இருந்து எழுந்த  உணர்வையே சிரமப்பட்டு 'என் ஏக இறைவன்' என வார்த்தைகளாக்கி இருந்தேன்.

 
ரஹ்மானை, ஏன் இறைவன் என்கிறேன் என்பதற்கு முதல், எனது நண்பன் ஒருவன் நேற்று இலங்கையில் தற்கொலை செய்து  கொண்டான், என்ற செய்தியை முகப் புத்தகத்தில் நண்பர்கள் பதித்து இருந்தார்கள். நான் படித்த பாடசாலையில் படித்தவன். எந்த விதமான வம்பு தும்புக்கும் போகாமல், தானுண்டு தன் பாடுண்டு என இருப்பவன்.  வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசும் அடக்கமான அவனை இந்த Extreme step எடுக்கவைத்தது எதுவாக இருக்கும் என தெரியவில்லை, அறிந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை. RIP நண்பா என்று சொல்லவும் பிடிக்கவில்லை. என்ன வாழ்ந்து விட்டேன் என்று செத்துப்போனானோ தெரியவில்லை.

பெங்களூரில் நான் இருந்த  வீட்டுக்கு அருகில் என்னுடன் சில நாட்கள் ஒன்றாக ஊர் சுத்திய ஒரு நண்பன் தற்கொலை செய்து கொண்டான். காதல் தோல்வி. இரண்டு வருடங்கள் காதலித்த பெண் இவனைக் கழற்றி விட்டு, இன்னொருவனை கல்யாணம் செய்து கொண்டு விட்டாளாம். எனது நண்பர்கள் சிலர், மிலிட்ரி சரக்கு அடித்துவிட்டு, அந்தப் பெண்ணை உண்டு இல்லை ஆக்குகிறோம் எனக் கிளம்பினார்கள். போதையில் பைக்கை ஸ்ராட் செய்வதாக நினைத்துக் கொண்டு எனது பழைய சைக்கிளை உதைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். எனக்கு இறந்து போனவன் மீதுதான் அயர்ச்சி உண்டானது.
 
காதல்- பேரன்பு. இரு உயிர்களை  எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு எனும் மெல்லிய இழையில்  இணைத்து வைத்திருக்கும் ரசவாதம். ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாக்கும் மந்திரம். 
 
 
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீ,. பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,. என பேரன்பை பொழிவதுதானே காதல். அந்தப் பேரன்பு சில இடர்கள் செய்தால், அதற்கு மரணமா தீர்வு? ஆண், தனது தாயையும், பெண் தனது தந்தையும் இன்னொரு உயிரில் தேடுவதைத்தானே ஒரு வார்த்தையில்  காதல் என்கிறோம். பேரன்பு பிழைத்துப் போனால் ஏன் பாஸ் மரணம்? மரணம் எப்படி நண்பா தீர்வாக முடியும்?. பிடித்தவளுடன் வாழக் கொடுத்துவைக்காவிட்டால், வாழக் கொடுத்து வைத்தவளுடன் பிடித்த வாழ்க்கை வாழவே முடியாதா...?. just think a minute
 
வாழ்ந்தென்ன பிரயோசனம், என நினைக்கும் கணத்தில் தான் தற்கொலை எண்ணங்கள் உருவாகின்றன. நானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அலைக்கழிக்க சிறிது காலம் இருந்தேன். சிறிது காலம் என்றால் சுமார் மூன்று மாதம். அப்போது கொழும்பில் இருந்தேன். வாழ்க்கையின் அனைத்து விதமான தோல்விகளும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வெள்ளவத்தை கடற்கரையில் உட்கார்ந்திருந்து கடலுக்குள் குதிக்கலாமா? இல்லை கடலுக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்தில் குதிக்கலாமா என சிந்திப்பேன். அப்போது எனக்குத் துணையாக இருந்தவை ஒரு ஐ-பாடும் ரஹ்மான் பாடல்களும் தான். தற்கொலை எண்ணம் அலைக்கழிக்கும் போதெல்லாம் வெறி பிடித்தவன் போல ரஹ்மான் பாடல்கள் கேட்பேன். மனம் அதுவாக சாந்தியடைந்து விடும். தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து வரும் கழிவிரக்கம், சாதிக்க வேண்டும் என்ற வெறியாக மாறும். என்னை தற்கொலை எண்ணங்களில் இருந்து ரஹ்மான் பாடல்கள் காத்தது போல, ஒவ்வொருவனுக்கும் ஒரு புகலிடம் இருக்கும். அந்தப் புகலிடத்தை கண்டறிந்தால் Life is beautiful. 

இன்று எனது வாழ்க்கை கொண்டாட்டமானது. அழகானது. சொந்த குழந்தை போல, எனக்கு  அன்பை திரட்டி ஒட்டு மொத்தமாக  தரும் தேவதையை எனக்கு காலம் பரிசளித்திருக்கிறது. இன்றும் என் வாழ்க்கையில் ரஹ்மான் பாடல்கள் ஒரு அங்கம். அன்று என்னை தற்கொலையில் இருந்து காக்க வைத்த ரஹ்மான் பாடல்கள் இன்று என் வாழ்க்கையை, அதன் அர்த்தங்களுடன் கொண்டாட்டமாக வைத்திருக்க உதவுகிறது. ரஹ்மான் பாடல்கள் கேட்காமல் எனது நாள் விடியாது. முடியாது.
சினிமாவுக்கு வராவிட்டால், செத்தே போயிருப்பேன் என சொன்னார்  இயக்குநர் பாலா. ரஹ்மான் பாடல்கள் இல்லாது விட்டிருந்தால் என்றைக்கோ செத்தே போயிருப்பேன். நான் பாதாதி கேசமாயும், கேசாதிப் பாதமாயும் பாடும் என் ஏக இறைவன் அவன். லவ் யூ.

Thursday, 20 February 2014

சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று

ஈழப் போராட்டம் சம்பந்தமாக சிறந்ததொரு உரையாடல் களத்தை ஆரம்பிக்கும் முகமாகவே சாத்திரியின் விரிவான பேட்டியை நான் எனது தளத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன். பாகம் ஒன்று, பாகம் இரண்டிற்கான எதிர்வினைகளை பொதுவெளியில் ஆங்காங்கே சிலர் பதிவு செய்திருந்ததை அவதானித்தேன். சாத்திரியின் பேட்டி சம்பந்தமாக எதிர்வினைகள் இருப்பின் அதை எனக்கு மெயிலில் அனுப்பினால் [aruliniyan001@gmail.com] கண்டிப்பாக எனது தளத்தில் அது பிரசுரிக்கப்படும். அதே நேரம் தனி மனித தாக்குதல்களை சுமந்து வரும் மடல்கள் என்னால்  நிட்சயமாக பிரசுரிக்க முடியாமல் போகும் அதற்காக அட்வான்ஸாகவே  மனம் வருந்துகிறேன். வாருங்கள் நண்பர்களே திறந்த மனதுடன் பேசலாம். மூன்றாம் பாகம் இங்கே. 

அன்புடன்

அருளினியன்.       


புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?

ஆசியாவில்  ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக  ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின்போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக  அமெரிக்க  உளவமைப்பே  இந்த போதைப் பொருள் உற்பத்தியினை  ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையாக உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் உற்பத்தியாகும் போதைப் பொருட்களிற்கும். இமய மலைச் சாரலில் இயற்கையாக விளையும் கஞ்சாவிற்கும் மேலை நாடுகளில் ஏகப் பட்ட கிராக்கி இருக்கிறது. அவற்றை தரை மற்றும் கடல் வழியாக  மும்பைக்கு கொண்டு வரப் பட்டு  அவை சரக்கு கப்பல்கள் மூலம் மேற்கு நாடுகளிற்கு பயணமாகும்.

எந்த வருடத்தில் இருந்து புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்?

எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சிறிய அளவில் புளொட் அமைப்பும் புலிகளும்  போதைப்பொருள் கடத்தலை தொடங்கியிருந்தாலும்  84 ம் ஆண்டு புலிகள் உறுப்பினர்கள் சிலர் மும்பையை மையமாக வைத்து கடத்தலை தொடங்கிய பின்னரே பரவலடைந்தது. சாதாரண கப்பல்கள் மூலமாக  போதைப்பொருள் கடத்தலானது தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களே சொந்தமாக கப்பல்களை வாங்கி உலகளாவிய ரீதியில்  செய்யத் தொடங்கியிருந்தனர்.

புலிகளின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை பொறுப்பாக நின்று வழி நடத்தியவர் யார்?

இது பல குழுக்களாக இயங்கியது. அதில்  தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர்  முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை  இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .
 

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இறந்த புலிகளுக்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டதா?

யாரிற்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டிருக்கவில்லை.   அது மட்டுமல்ல ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அதில் இறந்துபோனவர்கள், விபத்தில் மற்றும் கடுமையாக நோய்வாய் பட்டு  இயற்கை மரணம் அடைந்த எவருமே முறையாகப்  பெயர்கள் அறிவிக்கப்பட்டு மாவீரர்களாக கெளரவிக்கப்படவில்லை. விதிவிலக்காக  கிட்டு சென்ற கப்பலில் இறந்தவர்களும் இறுதி சமாதான காலத்தின் போது தாக்கியழிக்கப்பட்ட ஒன்பது கப்பல்களில் இரண்டு கப்பல்களில் பயணித்தவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அவர்கள் மாவீரர்களாக கெளரவிக்கபட்டிருந்தனர்.

இப்படியாக எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

 நூற்றியிருபதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். புலிகளின் தலைமை அவர்களை மாவீரர்களாக அறிவித்திருக்காவிட்டாலும். புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக  போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய  நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில்   மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட புலிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையான உறவு எப்படி இருந்தது? 

புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக  வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை.
அவரைப்பொறுத்தவரை  ஆயுதங்கள்  வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும்.  அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.


வெளிநாடுகளில் புலிகள் மீதான  தடை ஏற்பட்டதற்கு, புலியெதிர்ப்பாளர்கள் மற்றும் மாற்றும் மாற்றுக் கருத்தாளர்களின் பங்கும் பெரியளவில்  இருந்ததாக கருதுகிறீர்களா?

இல்லை. புலிகள் மீதான தடைக்கு இந்த மாற்றுக் கருத்தாளர்களின் பங்கு என்பது ஒரு சதவீதம் இருக்குமா என்பது கூட  சந்தேகமேயாகும்.  இந்த மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது புலியெதிர்ப்பாளர்கள் எனப்படுவோர், புலிகளிடம் ஜனநாயகம் இல்லை, அவர்கள் வன்முறையாளர்கள், படுகொலை செய்கிறார்கள் என  வெளிநாடுகளில் கூட்டம் போட்டு பேசியும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியும், மனித உரிமை அமைப்புக்களிற்கு புகார் அனுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், இவற்றால்  புலிகள் மீதான தடை என்பது சாத்தியமாகவில்லை. ஏனெனில் இவர்களிற்கு புலிகள் அமைப்பினுள் என்ன நடக்கின்றது என்பது  சரியாக தெரிந்திருக்கவில்லை.  அதே நேரம் அனேகமான ஜரோப்பிய நாடுகள் புலிகள் மீது மென்மை போக்கை கடைப்பிடித்திருந்ததோடு பல தனிப்பட்ட அரச மட்ட தொடர்புகளும் புலிகள் அமைப்பு சுதந்திரமாக இயங்கவும்  வழி வகுத்திருந்தது. ஆனால் இந்த மென்போக்கை புலிகள் அமைப்பும் அவர்களது வெளிநாட்டு பொறுப்பாளர்களும் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. வெளிநாடுகளில் பொறுப்பாக இருந்தவர்களிற்கிடையேயான போட்டிகளும், பொறாமைகளாலும் அவர்களே உள்ளே நடக்கும் இரகசியங்களை வெளிநாட்டு காவல் துறையினரிடம் போட்டுக் கொடுத்தார்கள். தாங்களே குட்டி நீதிமன்றம் போல் செயற்பட்டு வெளிநாடுகளில் தமிழர் பிரச்சனைகளிற்கு தீர்ப்பு கூறி தண்டனை கொடுத்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவன் காவல்துறையில் போய் புகார் கொடுக்கத் தொடங்கினான். இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்ப்பு புலிகளிற்கு எதிராக சர்வதேசத்தில் உருவாகக் காரணம் புலிகளின் கரும்புலி தாக்குதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டதும், தொடர்ந்தும் மக்களால் தேர்தெடுக்கப் பட்ட சிங்கள, தமிழ் ஆயுதம் தாங்காத அரசியல்வாதிகள் கொல்லப் பட்டதுடன்,  தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை  புலிகள் தரப்பே குழப்பியதுமே மிகப் பாரதூரமான குற்றங்களாக சர்வதேசம் பார்த்தது. அது மட்டுமல்லஇறுதியாக நடந்த பேச்சு வார்த்தைகளின்போது  இந்த தடைகளை நீக்கி சுதந்திரமாக  பேச்சு வார்த்தையில் புலிகள்  ஈடுபடுவதற்கு சர்வதேசமும் இந்தியாவும் இரண்டு விடயங்ளை நிறைவேற்றுமாறு புலிகளிடம் கேட்டிருந்தார்கள். அவையிரண்டையும் புலிகளின் தலைமை நிராகரித்து விட்டிருந்தது மட்டுமல்லாமல்  காலையில் பேச்சுவார்த்தைகளின் போது  மேசையில் புலிகள் தரப்பு தாங்கள் சமாதானத்திலும் பேச்சு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறோம் வன்முறையில் எமக்கு விருப்பம் இல்லையென்று சர்வதேசத்திடம் கூறிவிட்டு, மாலையில் புலம்பெயர் தமிழர்களின் கூட்டங்களில் தமிழ்ச்செல்வன் உரையாற்றும் போது  இனி வரப் போவதுதான் இறுதி யுத்தம். யுத்தம் மூலமே தீர்வு எனவே தமிழர்கள் அனைவரும் தாராளமாக நிதியை வழங்குங்கள் எமக்கு பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையில்லையென்று உரையாற்றுவார். அப்போது கை தட்டல் வானைப் பிளக்கும். இப்படிப்  பேசவேண்டாம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் இவற்றை பதிவு செய்யும் என்று பல தமிழ் பத்திரிகையாளர்கள் தமிழ்ச்செல்வனிடம் எடுத்தும் சொல்லியிருந்தார்கள். அதற்கு அவரின் பதில் 'அவங்கள் விசரங்கள் கிடக்கட்டும்' என்பதாகவே இருந்தது. இதனால்தான்  சர்வதேசம் புலிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டி வந்தது.


சர்வதேசமும் இந்தியாவும் புலிகள் மீதான தடையை எடுப்பதற்கு இரண்டு விடயங்களை முன் வைத்தாக கூறினீர்களே, அவை என்ன?


பேச்சு வார்த்தை காலத்தில் புலிகளோடு அதிகார பூர்வமாக சர்வதேச தரப்பில் ஒரு குழு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது   இன்னொரு குழுவினர்  புலிகளின்  இன்னொரு வெளிநாட்டு  பிரிவினருடன் இரகசியமாக நோர்வேயில்  பேச்சு வார்த்தை ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் புலிகளிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.  முதலாவது கரும்புலிகள் அமைப்பை  முற்று முழுதாக கலைத்து விடவேண்டும். இரண்டாவது வான் புலிகள் அமைப்பை கட்டியெழுப்பும் முயற்சிகளை  தற்காலிகமாக கைவிடவேண்டும் என்பதே. இங்கு இன்னொன்றை கவனிக்க வேண்டும்  உலக விடுதலைப் போராட்டக் குழுக்களிலேயே  முதன் முதலாக வான் படையை  கட்டியெழுப்பியவர்கள் புலிகள்அமைப்பு  மட்டுமே. அதனால் வான் புலிகள் என்பதனை மிக பலம் பொருந்திய ஒன்றாகவே  அதீத கற்பனைகளை கொண்டதாக அன்றைய காலத்தில் சர்வதேசமும் இந்தியாவும் நம்பியிருந்தனர் என்பதும் உண்மை. இந்த கோரிக்கைகளை புலிகளின் தலைமை மறுத்திருந்தது. பேச்சு வார்த்தை காலங்களில் மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தங்களிற்கு பணிந்து குழந்தைப்போராளிகள் பலரை பத்திகையாளர்களின் முன்னால் விடுவித்ததைப் போல கரும்புலிகள் அமைப்பை கலைக்காவிட்டாலும்,  ஒரு ஒப்புக்காகவேனும் பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் முன்னால்  ஒரு தொகை கரும்புலிகளை சாதாரண  படையில் இணைத்து கரும்புலிகளை கலைத்து விட்டதாக புலிகளின் தலைமை அறிக்கையொன்றை விடச் சொல்லி பலர் வைத்த கோரிக்கையை புலிகளின் தலைமை கடுமையாக மறுத்து விட்டிருந்தது. அடுத்ததாக உலக நாடுகளில் இருந்து புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முதலாவதாக இந்தியா தனது தடையை நீக்கவேண்டும்.அதற்கு ராஜீவ்காந்தியின் கொலை ஒரு பெரும் தடையாகவும், இந்தியாவிற்கு பெரிய  கெளரவ பிரச்சனையாகவும் இருந்தது. புலிகள் மீதான இந்தியாவின் தடையை நீக்குவதற்கு பொட்டம்மானை  தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு இந்திய அரசு சார்பில் கோரிக்கை  வைத்தார்கள். பொட்டம்மானை ஒப்படைத்ததன் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியத் தரப்பு கேட்கக் கூடாது என்று எழுத்து மூலம் தரவேண்டும் என்றும் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த விபரங்களும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப் பட்டது. இந்தக் கோரிக்கையும்  சுவரில் எறிந்த பந்தைப் போல புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டு திரும்பி வந்ததும் பெரும் பின்னடைவாக அமையக் காரணமாக அமைந்தது.  


விடுதலைப் புலிகளின் முக்கிய தூண்களில் ஒருவரான பொட்டம்மானை, இந்திய அரசு சரணடையச் சொல்வதை எந்த விதத்தில் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகிறீர்கள்?  

ஈழத்  தமிழ் இனத்தின் விடுதலைக்காக ஆயிரக்  கணக்கான  இளம் சந்ததியினர் மாவீரர்களாகியும்  தங்கள் பெயர்களே  வெளி உலகத்திற்கு தெரியாமல்  பல கரும்புலிகள்  உயிரைக் கொடுத்தும் உள்ளனர். அதே இனத்தின் விடுதலைக்காக  அந்த மக்களின் எதிர்காலத்திற்காக  பல  தடைகள் நீங்கி  அதற்காக இன்னாரு பாதை திறப்பதற்காகவும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைத்திருப்பதில் தவறேதும்  இல்லை என நினைக்கிறேன். அதே நேரம் பொட்டம்மானை இந்தியா உடனே தூக்கில் போட முடியாது. எனவே பல பிரபலமான வக்கீல்களை  வைத்து வாதடியிருக்கலாம்.  எனவே மீண்டும் மீண்டும் பொட்டம்மானை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு வைத்த கோரிக்கை  புலிகளின் தலைமையால் நிராகரிக்கப் பட்டிருந்தது இவையும் பேச்சு வார்தைகள் இறுக்கமடைய காரணமாக அமைந்தது.புலிகளிற்கு ஆயுத வழங்கலில் முக்கியமாக ஈடு பட்டிருந்த உங்கள் நண்பரான கே.பி.(குமரன் பத்மநாதன்) என்பவர் உண்மையில் கைது செய்யப் பட்டாரா? அல்லது சரணடைந்திருந்தாரா?

கே.பி எனது நண்பர்  என்பதைவிட நாங்கள் ஒரு அமைப்பில் இயங்கினோம் என்பதுதான் சரியானது. அதே நேரம் அவர் கைது செய்யப்பட்டதை செய்திகளில் அறிந்திருந்தேன். பின்னர் அவருடன் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தின் போதும் தான் கைது செய்யப் பட்டதாகவே  என்னிடம் கூறியிருந்தார்.


கே.பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2001 ம் ஆண்டு புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அதற்குள் எழுந்த அதிகார போட்டிகள் காரணமாக புலிகளின் தலைமையோடு அருகாகவும், நெருக்கமாகவும் தலைவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்களின் கைகளிற்கு அதிகாரங்கள் கை மாறத் தொடங்கியிருந்தது. இந்தப் புகழ்ச்சியானது பிரபாகரன் என்பவர் தலைவர் என்பதைத்  தாண்டி தேசியத் தலைவர் சூரியத்தேவன், முருகன் என்று  கட்டவுட்டுகளாகவும் கவிதைகளாகவும் பாடல்களாகவும் வெளிவரத் தொடங்கியியுமிருந்தது. அதே நேரம் போராட்டத்தையும் மக்கள் விடுதலையை மட்டுமே  குறிக்கோளாக கொண்டு  தலைமைக்கு துதி பாடாமல் தூரமாக  இருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் ஓரம் கட்டப் பட்டனர். அதன்போது  கே.பியும்  ஓரம் கட்டப் பட்டதோடு  பரப்புரை. வர்த்தகம் .நிதி.வெளிநாட்டு அரசுகள் அமைப்புக்களுடனான  தொர்புகள். ஆயுதபேரம்.வாங்குதல் .வழங்கல் .ஆவணங்களை  தயாரித்தல்.மருத்துவம் மற்றும் மருந்து  தொழில் நுட்ப உபகரண பிவு  என பல குழுக்களாக  இயங்கிய  வெளிநாட்டு பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து  அதனை  அனைத்துலக செயலகத்தின் கீழ் கொண்டு வந்து  ஒரு நிறுவனமயமாக்கல்  முறையாக்கி  புலிகளின் முதுகெலும்பு என சொல்லக் கூடிய  வானளாவிய அதிகாரங்கள்  அனைத்தையும்.கஸ்ரோ பொறுப்பெடுத்திருந்தார். 


கே.பி நீக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன?

 சொல்லப்பட்ட ஒரேயொரு காரணம், அதை நான் சப்பைக் காரணம் என்றே சொல்வேன். ஆயுதங்கள் வாங்கியதில் சரியாக கணக்கு காட்டவில்லையென்பதுதான். புலிகளின் மாதாந்த வருமானமே எவ்வளவு என்று தலைமைக்கே சரியாக தெரியாத போது கணக்கு சரியில்லையென்று கஸ்ரோ தலைமையிடம்  வைத்த குற்றச்சாட்டும் அதனை தலைமை ஏற்றுக் கொண்டதும்  நகைச்சுவையானது.


கே.பி கொம்பனியின் நீக்கம் நடைபெறாமல் போயிருந்தால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவு எப்படி இருந்திருக்கும்? 

கே.பி கொம்பனி புலிகளின் தலைமையால் நீக்கப் படாது போயிருந்தால் புலிகள் நிலங்களை இழந்து பலவீனமடைந்திருந்தாலும், புலிகளிற்கு ஆயுதங்கள் தொடர்ந்தும் கிடைத்தபடியே இருந்திருக்கும்யுத்தம் நீண்டுகொண்டேயிருந்திருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் புலிகளின் தலைமை கூண்டோடு அழிந்து போகாமல் காப்பாற்றப் பட்டிருக்கும்.


கே.பியை தொடர்ந்து வெளிநாட்டு நிருவாகப் பொறுப்புக்கு தலைமையேற்ற காஸ்ட்ரோவின் செயற் பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு நாளின் 24 மணி நேரத்தில்,  சில நேரங்களில் 20 மணிநேரங்கள் விழித்திருந்து இயங்க வேண்டியதுதான் புலிகளின் வெளிநாட்டு பிரிவு. ஏனென்றால்  புலிகளின் வெளிநாட்டு பிரிவுஅவ்வளவு முக்கித்துவம் வாய்ந்தது.  ஆனால் ஒரு நாளைக்கு வெறும் அரை மணிநேரம் மட்டுமே எழுந்து உட்காரக் கூடிய கஸ்ரோவிடம் அனைத்துலக செயலக  பொறுப்பு போய் சேர்ந்ததும், அவரின் கீழான அனைத்து பொறுப்பக்களும் புதியவர்களிடமும்  புலிகள் அமைப்பால் வெளிநாடுகளிற்கு அனுப்பி கல்வி பயின்றவர்களிடமும் ஒப்படைக்கப் பட்டது. கணணித் தொழில் நுட்ப அறிவும், ஆங்கில அறிவும் இருந்தால் ஆயுதங்களை வாங்கி விடலாமென  புதியவர்கள் நினைத்தார்கள். நவீன ஏவுகணைகள் வாங்குவதற்காக புதிய ஆயுத முகவர்களை தேடிப் போனார்கள். ஒரு காலத்தில் போலி மனிதர் என பழைய கட்டமைப்பினர் ஒதுக்கி வைத்திருந்த  தமிழகத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரையும்  மீண்டும் தங்களுடன் இணைத்தார்கள். அவரும் பல ஆயுத முகவர்களை புதியவர்களிற்கு அறிமுகப் படுத்தினார். கஸ்ரோ தலைமையிலான  புதியவர்கள் ஆயுத முகவர்கள் என நம்பி பேரங்கள் நடத்திய அனைவருமே வெளிநாட்டு உளவமைப்புளின் ஆட்களாக இருந்தனர். அவர்களால் இறுதியில் பணத்தையும் இழந்ததோடு, ஆயுதங்களை  கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.  எல்லாவற்றிக்கும் மேலாக  புலிகள் தரப்பில் ஆயுத பேரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதாகி சிறைகளில் வாடுகிறார்கள்.

தொடரும்...

Monday, 3 February 2014

சாத்திரி பேசுகிறேன் பாகம்: இரண்டு.புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். முதலாம் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பதிவு செய்கிறேன். மூன்றாம் பாகம் மிக விரைவில் பதிவு செய்யப்படும். மூன்று தசாப்த காலமாக போராடிய ஈழத் தமிழர் இனம் தமது தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தப் பேட்டி என்னால் எடுக்கப்பட்டது. இந்தப் பேட்டி உங்களிற்கு ஈழப் போராட்டம் சம்பந்தமான இன்னொரு முகத்தை பதிவு செய்யும். 

அன்புடன்,

அருளினியன். 

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

ஆம் வெளியேறினார்கள். இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையான  சமாதானப் பேச்சு வார்த்தைகள்  தொடங்கி, ஆரம்ப இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள்  தாய்லாந்தில் நடைபெற்றது.  தாய்லாந்தில் நடந்த இரண்டாவது சுற்று  பேச்சு வார்த்தையின் போதே, மேலதிகமாக  புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும். மட்டக்களப்பு  அம்பாறை மாவட்ட  தளபதி கருணாவும் புலிகளின் பேச்சு வார்த்தை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தை  நோர்வே  'ராடிசன்'  விடுதியில் நடைபெற்றிருந்தது. அங்கு புலிகள் இலங்கை அரசாங்கம் இடையான பேச்சு வார்த்தைக்கு ஆதரவும் அனுசரணையும் கொடுத்த சுமார் 30 நாடுகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். இங்கு வைத்துத்தான் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகள் அன்ரன் பாலசிங்கத்திடம் தனி நாட்டுக் கோரிக்கையை தவிர்த்து, தமிழர்கள் சுதந்திரமாகவும்  சமாதானத்தோடும் வாழும் வகையிலான ஏனைய தீர்வுகளை புலிகள் தரப்பிலிருந்து முன்மொழியும்படியும் அதனை தாம் பரிசீலிப்பதாகவும், ஆனால்  தனி நாட்டுக் கோரிக்கையை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக கூறி விட்டார்கள். சர்வதேசத்தின் பொறியில் மாட்டாமல் அதே நேரம் ஸ்ரீ  லங்கா அரசிடம் ஏமாந்து போகாமல்  இருப்பதற்காக  அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமயோசிதமாக  புலிகள் சுயநிர்ணய உரிமையை பரிசீலிக்கத் தயார் என்றும் அதில் உள்ளக சுய நிர்ணயம், வெளியக சுய நிர்ணயம் என இரண்டு வகையுண்டு எனவும்  இந்த இரண்டு வகையில் தமிழர்களிற்கு எது சாதகமானதோ அதனை தாம்  பரிசீலிக்க உள்ளதாகவும்  அறிவித்தார். இதனைக் கேட்ட இலங்கை அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளிற்கு குழப்பம் ஏற்பட்டது. அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா "சுய நிர்ணயத்தில்  உள்ளகம், வெளியகம் என்று எதுவும் இல்லை இப்போதுதான் இதைப்பற்றி  நான் கேள்விப்படுகிறேன்" என்று அறிக்கையும் விட்டார். உண்மையில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்ட ' உள்ளக சுயநிர்ணய உரிமை' என்பது பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களை வழங்குகிறது. ஆனால் அன்ரன் பாலசிங்கத்துடன் புலிகள் சார்பாக பேச்சு வார்த்தையிலில் கலந்து கொண்ட தமிழ்ச்செல்வன் உடனேயே பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு "பாலசிங்கத்தார் தமிழீழக் கொள்கையை கை விட்டு விட்டார்" என்று போட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 'சுயநிர்ணயம்' என்பது பாலசிங்கம் அவர்களின் சொந்தக் கருத்தேயன்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருத்து அல்ல என்றும் அறிக்கையும்  விட்டிருந்தார். அதற்கடுத்ததாக  மீண்டும் தாய்லாந்தில் நடந்த நான்காவது பேச்சு வார்தையிலும், ஜந்தாவதாக ஜேர்மன் பேர்லினில் நடந்த பேச்சு வார்த்தையிலும்  அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஓரம் கட்டப்பட்டது மட்டுமல்லாது, அந்தப் பேச்சு வார்த்தை முடிந்ததும்  வன்னிக்கு அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கும் பிரபாகரனிற்கும் இடையே பேச்சு வார்த்தைகள் தொடர்பாக  நடந்த கடும் விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் திரும்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நிலை காரணமாக அவர் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகிவிட்டாரெனவும், அவரது பொறுப்பினை தமிழ்ச்செல்வன் ஏற்பார் எனவும் புலிகளின் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர்.

அதாவது அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார் எனக் கூறுகிறீர்களா?

அன்ரன் பாலசிங்கம் பலவந்தமாகத்தான் வெளியேற்றப் பட்டார். பேச்சு வார்த்தைகளின் போக்கை கவனித்தபடியே  இருந்தவர் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பல தடைவை காப்பாற்றிய  தன்னால் இந்தத் தடைவை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என தனது இறுதிக் காலங்களில் பலரிடம் சொல்லி கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.

நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப்படுத்தியது யார்?

புலிகளின் அனைத்துலக செயலகப் பிரிவு பொறுப்பாளராகவும்  பிரான்ஸ் பொறுப்பாளராகவும் இருந்த லோறன்ஸ் திலகரே  நாதன் மற்றும் கஜன் கொலையை வழிப் படுத்தினார். ஆனால் இந்தக் கொலைகளை பல கோணத்தில் ஆராய்ந்த பிரெஞ்சு காவல் துறை புலிகளே இதனை செய்தார்கள் என்று தீர்மானித்து அவர்களை நோக்கி விசாரணைகளைத் திருப்பினர். கைதாவதில் இருந்து தப்பிக்கும் முகமாக லோறன்ஸ் திலகர் வன்னிக்கு தப்பிச் சென்றார். நாதன், கஜன் கொலையை நன்கு திட்டமிடாமல் சொதப்பியதற்காக தலைமையால் திலகரின் பதவி நிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிலகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். வன்னி சென்றிருந்த திலகரின் தொடர்புகள் ஏதும் கிடைக்காததால், பிரான்சில் வாழ்ந்து வந்த அவரின் மனைவி அவரின் உறவினர்களிடம் தமிழ்நாட்டிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லோரன்ஸ் திலகர் இப்போது எங்கே?

இறுதியுத்தம் வரை புலிகளுடன் இருந்த இவர் இறுதி யுத்தத்தில் இறந்து போய் விட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.


சபாலிங்கத்தின் கொலையை வழிப்படுத்தியது யார்? சபாலிங்கத்தை கொலை செய்யும் கட்டளை தலைமையிடம் இருந்து வந்ததா?

சபாலிங்கத்தை கொல்லும் கட்டளை தலைமையிடமிருந்தே வந்ததாகத்தான் அறிகிறேன். காரணம் சபாலிங்கமும் ஈழபோராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தமிழ் மாணவர் பேரவையில் இருந்தவர் ஆரம்ப காலத்தில் பிரபாகரனிற்கும் நெருக்கமாக இருந்ததோடு அவரது தலைமறைவு வாழ்க்கை காலத்தில் பரந்தன் உப்பள பகுதியில்  பிரபாகரன் மறைந்திருக்க உதவியவர். இவர் பின்னர் பிரான்சிற்கு  இடம்பெயர்ந்த பின்னர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் பற்றி ஒரு ஆவணப் படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆவணப்படம் வெளியானால் பிரபாகரனின் பெயரிற்கு களங்கம் ஏற்படும் என்பதாலேயே  சபாலிங்கத்தை கொலை செய்யும் படி பிரபாகரன் உத்தரவிட்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தை விபரமாக தாராகி சிவராம் அவர்களே தாயகம் பத்திரிகையில் முன்பு எழுதியிருந்தார். அதனை இனியொரு டொட்.கொம் சபாநாவலன் மீள் பிரசுரம் செய்துள்ளார்.


பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக இருந்த  பரிதி என்கிற றேகனைக் கொன்றது யார்?
பிரான்சில் புலிகளின் பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்த பரிதி (றேகன்) கொலை பற்றி நான் ஏற்கனவே கனடாவிலிருந்து வெளியாகும் பூபாளம் பத்திரிகையில் பங்கு பிரிப்பும் படுகொலையும் என்றொரு விரிவான கட்டுரையை  எழுதியிருந்தேன், அது இன்னமும் எனது வலைப் பக்கத்தில் உள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது பல மில்லியன் டாலர் பெறுமானமுள்ள சொத்துக்களை யார் எப்படி பிரிப்பது என்பதில் பெரிய போட்டிகளும், அந்தச் சொத்துக்களுக்காக  சண்டைகளும் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு போட்டியில் ஒரு குழுவினரால் கூலிக்கு அமர்த்தப் பட்டவர்களால் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார். இவரது கொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டிந்தனர். ஆனால் பிரான்சில் இது போன்ற வந்தேறு குடிகளான வெளிநாட்டவர்களின் குழு மோதல்களையும்  அதனால் நடக்கும் கொலைகளையும் பற்றி பிரெஞ்சு காவல்துறையினர் அதிகளவு அக்கறை கொள்வதில்லை, கொன்றவனும் வெளிநாட்டவன் செத்தவனும் வெளிநாட்டவன் என்பதால் அவர்கள் அதைக் கணக்கெடுப்பதில்லை. அதே நேரம் தங்கள் நாட்டிற்கோ தங்கள் மக்களிற்கோ பாதுகாப்பு பிரச்சனை என்று வரும்போது பிரெஞ்சு காவல்துறையினரின் நடவடிக்கைகள் இறுக்கமாக  இருக்கும். எனவே பரிதி கொலையில் கைதானவர்களும் சத்தமின்றி விடுதலை செய்யப் பட்டு விட்டனர்.

பரிதியை கொன்ற குழு எது? 

 பரிதியால் வளர்க்கப்பட்ட வன்முறைக்குழுவான 'பாம்பு குறூப்' எனப்படும் குழுவில் இயங்கியவர்களே பரிதியைக் கொன்றார்கள். 

பரிதி வன்முறை குழுவை வளர்த்தாரா? விபரமாக அதைப்பற்றி கூற முடியுமா?

பரிதி மட்டுமல்ல வெளிநாடுகளில்  புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர்கள் அனைவருமே காலங் காலமாக தங்களிற்கென ஒரு வன்முறை குழுவை தங்களிற்கு கீழே இயக்கியபடிதான் இருந்தார்கள். அதில் பெரும்பாலும் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வெளிநாடு வந்துசேர்ந்தவர்களும், நிரந்தர வதிவிட உரிமையற்ற, அல்லது வேலையற்ற பல இளைஞர்களும் இருந்தார்கள். புலிகளிற்கு பணம் கொடுக்க மறுப்பவர்கள், புலிகளிற்கு எதிராக கருத்து வைப்பவர்களை,   எழுதுபவர்களை  மிரட்டுவது, அடிப்பதுதான் இவர்களதுவேலை. ஜரோப்பாவில் இப்படியான மிரட்டுதல், அடித்தல் போன்ற வன்முறை கலாச்சாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களில் சுவிஸ் பொறுப்பாளராக இருந்த முரளியும் பிரான்ஸில் சுக்குளா என்பவரும் மிக முக்கியமானவர்களாவார்கள்.

'சுக்குளா' பற்றி  விபரமாக சொல்ல முடியுமா?

தற்சமயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வசிக்கும் இவர் புலிகள் அமைப்பில் வடமராச்சி பகுதியில் உள்ள  நெல்லியடி மற்றும் கரவெட்டி பகுதிகளிற்கு பொறுப்பாளராக இருந்தவர். இந்திய ராணுவ காலத்தில் அன்ரன்பாலசிங்கம் அவர்களும் அவரது மனைவி அடேலும் இவரது பாதுகாப்பில்தான் இருந்தார்கள். இவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டதும் புலிகளின் ஏராளமான ஆயுதங்களை காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல், அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவிடத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டிருந்தார். இவரது தகவலை வைத்து அன்ரன் பாலசிங்கமும் அவரது மனையும் இருந்த  மறைவிடத்தை இந்திய இராணுவம் சுற்றி வளைத்திருந்தனர். ஆனால் பொது மக்களின் உதவியால் அன்று அவர்கள் தப்பி விட்டிருந்தார்கள். அதன் பின்னர் நெல்லியடிசந்தியில் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து தலையாட்டியாக இருந்து புலி ஆதரவாளர்கள் பலரையும் காட்டிக் கொடுத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த புலிகளின தலைமை அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. சுக்குளாவை கொல்வதற்காக அன்று அந்தப் பகுதிகளில் இயங்கிய புலிகள்  பல தடைவை குறிவைத்தார்கள், ஆனால் சுக்குளா தப்பிவிட்டார். பின்னர் இவர் காங்கேசன்துறை முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தார். இந்திய இராணுவம் இவரை விடுதலை செய்தபோது  தனக்கு புலிகளால் உயிருக்கு ஆபத்து எனவே தன்னை கொழும்பில் கொண்டு போய் விடும்படி கோரிக்கை வைத்ததையடுத்து இந்திய இராணுவம் இவரை தங்கள் விமானத்தில் கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விட்டிருந்தார்கள். அங்கிருந்து வெளிநாடு வந்து சேர்ந்தவர் புலிகளிற்கு பயந்து அடங்கி  இருந்தார். பின்னர் யாழ் மாவட்ட தளபதியக இருந்த கிட்டு ஜரோப்பா வந்திருந்த சமயம் இவரை தேடி கண்டு பிடித்து தலைமையிடம் கதைத்து இவருக்கு மன்னிப்பும் வழங்கியதோடு மீண்டும் வெளிநாடுகளில் இயக்கத்திற்கு வேலை செய்யும் பொறுப்பையும் கொடுத்திருந்தார்.

தலைமையால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு கிட்டு அவரைத் வலிந்து தேடிப்பிடித்து தலைமையிடம் மன்னிப்பு வாங்கிக் கொடுத்து அவரை மீண்டும் இயக்கத்திற்கு வேலை செய்யவைக்க வேண்டிய தேவை என்னவாக இருக்கும்?

சுக்குளாவும் கிட்டுவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். அதே நேரம் அவர்களது ஆழமான நட்பிற்கு பின்னரான ஒரு கதையும் உண்டு. 1986 ம் ஆண்டு ரொலே இயக்கம் புலிகளால் அழிக்கப் பட்டதை கண்டித்து  யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.  அதே நேரம் யாழ் பல்கலைக் கழகத்தில் புதிய மாணவர்களை  பகிடிவதை செய்யக்கூடாது என்றொரு சட்டத்தை புலிகள் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் சில மாணவர்கள் புதிதாக இணைந்த மாணவிகளை பகிடி வதை செய்திருந்தார்கள். அதற்காக பல மாணவர்கள் கிட்டுவால் தண்டனை பெற்றிருந்தனர். அப்படி தண்டனை பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இது யாழ்குடா நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக இருந்தது. ஆரம்பத்தில் இந்தக் கடத்தலை ஈ.பி.ஆர்.எல்.எவ்.இயக்கமே செய்ததாக புலிகளால் பரப்புரை செய்யப் பட்டது. ஆனாலும் புலிகளே கடத்தியதாக மாணவர்கள் நம்பினார்கள். அந்தக் கடத்தலை கிட்டுவின் உத்தரவின் பெயரில் நடத்தியவர்களில் சுக்குளாவும், தெல்லிப்பளை பிரதேச பொறுப்பாளராக இருந்த மதி என்பவரும் முக்கியமானவர்கள். விஜிதரன் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார். அந்த மாணவர் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ரயாகரனும் புலிகளால்கடத்தப்பட்டிருந்தார்.ஆனால் பல்கலைக் கழகத்தில் பல மாணவர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், விஜிதரன் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதற்கு ஒரே காரணம் அவர் பகிடிவதை செய்த பெண் கிட்டுவின் காதலியாக இருந்தார் என்பதேயாகும். அது எவருக்குமே தெரிந்திராத விடயம் இதற்கு கைமாறாகவே கிட்டு சுக்குளாவிற்கு மன்னிப்பு வாங்கி கொடுத்திருந்தார்.


வெளிநாடுகளில் மாற்றுக் கருத்தாளர்களை கொலை செய்வது அல்லது மிரட்டுவது  அந்தந்த நாடுகளில் புலிகள் இயக்கம் மேல் மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கித்தரும் என்ற அடிப்படைப் புரிந்துணர்வு புலிகளிடம் இருந்திருக்கவில்லையா?

இல்லையென்றுதான சொல்லவேண்டும். காரணம் இது போன்ற செயற்பாடுகளால் புலிகளிற்கு வெளிநாடுகளில் கெட்ட பெயரும் அவர்களின் செயற்பாடுகளிற்கு தடைகளும் வரும் என பல தடைவை வெளிநாட்டு சட்ட திட்டங்களை அறிந்த வெளிநாடுகளில் பல வருடங்கள் வாழ்ந்த புலிகளிற்கு ஆதரவாக வேலை செய்த பலராலும் வெளிநாடுகளில் இரகசியமாக வேலை செய்த என்னைப் போன்றவர்களாலும் தலைமைக்கு அடிக்கடி தெரியப் படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தலைமையால் இவற்றை கட்டுப் படுத்த முடியாமல் போயிருந்தது. அல்லது கட்டுப்படுத்தும் அக்கறையின்றி விடப்பட்டிருந்தது என்றுதான் சொல்லலாம். இந்த செயற்பாடுகளின் தொடர்ச்சியே  வெளிநாடுகளில் புலிகள் மீதான தடைகள் வரக் காரணமாகும்.


வெளிநாடுகளில் இப்படியாக எத்தனை பேரை கொலை செய்திருப்பார்கள் புலிகள்?

இயக்கத்தில் என்னுடைய வேலைகள் தனியானவை என்பதால் புலிகள் இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  நான் பிரான்சில் வசிப்பதால் இங்கு நடந்த விடயங்களின் தகவல்கள் மட்டுமே பெரும்பாலும் தெரியும்.


வெளிநாடுகளில் புலிகள் செய்யும் கொலைகள் தலைமையின் அனுமதியுடன் தான் நடந்ததா?

பொதுவாகவே புலிகளினால் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் தலைமையின் அனுமதி அல்லது கட்டளைக்கிணங்கவே நடைபெறும். தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக  ஒருவர் ஒரு நடவடிக்கையை செய்திருந்தால்  கட்டாயம் தலைமையால் அவரிற்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கும். அதுவும் வெளிநாடுகளில் நடந்த விடயங்கள் நிச்சயமாக தலைமையின் அனுமதியின்றி நடந்திருக்க முடியாது.


விடுதலைப் புலிகள் புலம் பெயர் நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி, அவர்களை கடத்தி, கப்பமாக பணம் பெற்று வந்தனர் என்பது உண்மையா?

ஜரோப்பாவில்  ஒருவரை கடத்தி வைத்திருந்து பணம்பெற முடியாது. ஏனெனில் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் பணம் கொடுக்க மறுத்தவர்களை  திடீரென கடத்திக்கொண்டு போய் தாக்கி விட்டு வீதியில் போட்டு விட்டு போயிருக்கிறார்கள். ஆனால் யாராவது பணம் கொடுக்காவிட்டால் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள  அவரது உறவினர்களை கடத்துவோம், கொலை செய்வோம்  என அச்சுறுத்தி பணம் பெற்ற நிகழ்வுகள்  பல நடந்தது. அது  பல நாடுகளிலும் வழக்குகளாக பதிவாகியும் இருக்கின்றது. இதனால் சம்பந்தப் பட்டவர்கள் கைதாகி தண்டனை பெற்றும் உள்ளனர். இதில் இயக்கத்திற்கு  நிதி கேட்டு  என்னையே ஒருவர் பாரிசில்  மிரட்டிய நகைச்சுவையான விடயம் கூட நடந்தது.   

தொடரும்..

Friday, 31 January 2014

சாத்திரி பேசுகிறேன் பாகம்: ஒன்று.'சாத்திரி'' எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். 'அவலங்கள்'  எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர். புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் 'சியாம்' என்கிற புனை பெயரில் இயங்கினார். புலிகள் அமைப்பில் வெடி பொருள் பிரிவில் பணியாற்றிதால் 'சக்கை' என்கிற பெயரும் சேர்ந்து 'சக்கை சியாம்' என பலராலும் அழைக்கப்பட்டார். புலிகளின் சர்வதேசப் பிரிவிலும் பணியாற்றி அதில் இருந்து வெளியேறிய பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கத் தொடங்கியதும்  'சாத்திரி'  என்கிற புனை பெயரில் பத்திரிகைத் துறையிலும் எழுத்து  துறையிலும் வலம் வருகிறார்.

சாத்திரியாரை  நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். மூன்று தசாப்தகாலமாக போராடிய ஈழத் தமிழர் இனம் தமது தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்தப் பேட்டி என்னால் எடுக்கப்பட்டது. இந்தப் பேட்டி உங்களிற்கு ஈழப் போராட்டம் சம்பந்தமான இன்னொரு முகத்தை பதிவு செய்யும்.

அன்புடன்,

அருளினியன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளத்  தூண்டுதலாக அமைந்த சம்பவம் என்ன?

அந்தக்கால ஏனைய இளைஞர்கள் போல ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ள எனக்கும்  தூண்டுதலாக அமைந்த சம்பவம் இலங்கையில் 83 ம் ஆண்டில் நிகழ்ந்த இனக் கலவரம்தான். 83 கலவரத்திற்கு முன்பே ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்திருந்தாலும்  அது பற்றிய அக்கறைகள்  ஏதுமற்ற சாதாரண  பாடசாலை மாணவனாகவே இருந்தேன். ஆனால்  83 கலவரத்தின் தமிழர்களின் பாதிப்புக்கள் பற்றிய செய்திகள். தமிழ் சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்திகள்  மற்றும் அகதிகளாக  ஆயிரக் கணக்கில் கப்பலில் காங்கேசன் துறையில் வந்திறங்கிய கொழும்புத் தமிழர்களின் துயரங்களை நேரில் பார்த்ததும் ஒரு இளைஞனுக்கேயுரிய கோபமும்  பழிக்கு பழிவாங்கும் உணர்ச்சியும் ஒன்று சேர என்னை ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.


பல விடுதலை இயக்கங்கள் இருந்த போதும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் இணைந்து கொள்ளக் காரணம் என்ன?

அன்று பல விடுதலை இயக்கங்கள் இருந்தது உண்மை. முதலில் அன்றைய கால கட்டத்தில் பெரிய இயக்கமாக இருந்த புளொட் அமைப்பில் சேருவதற்காகவே போயிருந்தேன். இயக்கத்திற்கு போனதுமே கையில் ஆயுதம் தருவார்கள் என எதிர்பார்த்து போயிருந்த எனக்கு அவர்கள்  ஒட்டுமொத்த மக்கள் போராட்டம் நடக்கவேண்டும் என்று சொல்லி அரசியல் வகுப்புக்களை வைத்து வாழ்க்கையை  வெறுக்கப் பண்ணி விட்டார்கள். அடுத்ததாக தீவிர இடதுசாரிக் கொள்கைகளை கொண்டிருந்த ஈ.பி. ஆர்.எல்.எவ்.அமைப்பிடம் போயிருந்தேன். அவர்களோ செஞ்சீனம். கியூப விடுதலைப் போராட்டம் என்கிற இரண்டு பெரிய புத்தகங்களை கையில் தந்து அதனை படித்து மனப் பாடம் செய்துகொண்டு வரச் சொல்லி அதில் கேள்விகளை கேட்டு சரியான பதிலை சொன்னால்தான் இயக்கத்தில் இணைப்போம் என்றார்கள். 'செஞ்சீன'  புத்தகத்தைப்  புரட்டிப் பார்த்தேன் சாதுவாக தலை சுற்றியது. புரியாத சொற்கள் கொண்டு எழுதப்பட்டிருந்த அதனைப்  படிக்க தனி தமிழ் அகராதி ஒன்று தேவைப் பட்டது. கியூப விடுதலைப் போராட்டத்தை தூக்கிப் பார்த்தேன் வலு பாரமாக இருந்தது. இந்தப் புத்தகங்களை படிக்கின்ற நேரம் பேசாமல் பாடசாலைக்கே போய் படித்திருக்கலாம் என்று மனம் சொன்னது. இது வேலைக்காகாது என்று தோன்றிய கணத்தில் அவற்றை தூக்கியெறிந்து விட்டு புலிகள் அமைப்பை சேர்ந்த அன்பு என்பவரை சந்தித்தேன். அவர் உடனடியாகவே  எனது கைகளில் 3.8 றீற்றா வகை கைத் துப்பாக்கியை கொடுத்து குறி பார்த்து சுடும்படி சொன்னார். புத்தகங்கள், பாடமாக்கல்கள், சொற்பொழிவுகள் எதுவுமே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. எனவே புலிகள் அமைப்பில் இணைந்து விட்டேன். இணைந்த பின்பு பயிற்சிகள் கடினமாக இருந்தது.

உலகப் புரிந்துணர்வு இல்லாத, நல்லது கெட்டது புரியாத இளைஞர்கள் கைகளில் ஆயுதம் கொடுத்ததது சரியா?

இந்தக் கேள்வியை  நீங்கள் இந்திய உளவமைப்பான ரோவிடம் அல்லது ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுக்க முடிவு செய்த  இந்திரா காந்தி அம்மையாரின் ஆவியிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அன்று ஈழ விடுதலை இயக்கங்களிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் இந்தியா கொடுக்காது விட்டிருந்தால் பிரபாகரன் மட்டுமல்ல மற்றைய இயக்கத் தலைவர்களும் இப்போது எங்காவது ஒரு வெளிநாட்டில் அகதி தஞ்சம் கோரி வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அல்லது எண்பதுகளிலேயே  இறந்துபோயிருப்பார்கள். அதுவும் இல்லா விட்டால் இலங்கை சிறைகளில் இருந்திருப்பார்கள்.

இந்திய உளவு அமைப்பான ''றோ'வின் பங்களிப்பு போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிப் போர் வரை எப்படி இருந்தது?

இலங்கையில் அன்றிருந்த ஜே.ஆர். தலைமையிலான அரசை  போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி அங்கு  தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவே ஈழ விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொடுக்க 'ரோ' அமைப்பு முன் வந்தது. இது அனைவரிற்கும் தெரிந்த விடயம். ஆனால் எம்மில் பலர் இந்திரா அம்மையார் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழத்தை பெற்றுக் கொடுத்திருப்பார் என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஏனெனில் இந்திய உளவமைப்பானது தனியாக ஒரு இயக்கத்திற்கு  பயிற்சி கொடுக்காமல் புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ், ரெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ்
என ஜந்து விடுதலை இயக்கங்களிற்கு பயிற்சி கொடுத்ததன் மூலம் ஒரு இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப்  போனாலும், இன்னொரு இயக்கத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைத்து தங்கள் சொற்படி இயக்கலாம் என்ற நரித்தனமான நோக்கம் இருந்தமையாலே ஆகும். இந்த இந்தியாவின்  தந்திரத்தை உணர்ந்த புளொட் அமைப்பும் புலிகளும் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவோடு விலத்தியிருக்கவே விரும்பினார்கள். மற்றைய அமைப்புக்கள் பொருளாதார ரீதியாக முழுக்க  முழுக்க இந்திய உளவமைப்பையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களிற்கு இருந்தது. பின்நாளில் புலிகளால் தடை செயயப்பட்ட பின்னர் தங்கள் பாதுகாப்பிற்காகவும் 'றோ' வோடு உறவுகளை கொண்டிருக்கவேண்டிய கட்டாயமும் அவர்களிற்கு இருந்தது. அதே நேரம் புலிகள் அமைப்பும் கூட 'றோ' வினது கட்டளைகளிற்கு இணங்க பல தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பாக புலிகள் 1985 ம் ஆண்டு அனுராத புரத்தில் பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதல். மருதானை மற்றும் புறக்கோட்டை  குண்டு வெடிப்பு ஆகியனவற்றை நாங்கள் உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக  மாலை தீவை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக புளொட் அமைப்பை வைத்து மாலை தீவு மீது இந்திய உளவமைப்பான ''றோ'  நடாத்திய நாடகத் தாக்குதல்கள் முக்கியமானவை. அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் தனது கைப் பிடிக்குள் வைத்திருப்பது, மீறிப் போகிறவர்களை அழித்து விடுவது இதுவே 'றோ' அமைப்பின் நோக்கம். புலிகள் அவர்கள் கட்டுப் பாட்டிற்கு அடங்க மறுத்தார்கள். ராஜீவ் காந்தி கொலையால் இழந்த கெளரவத்தையும் புலிகள் அமைப்பினை  அழித்து முடித்ததன் மூலம் அவர்கள் தீர்த்துள்ளனர். ஆனால் இலங்கைத் தீவு இந்தியாவிற்கு அருகில் இருக்கும் வரை இந்தியாவின் அரசியல் தாக்கமானது இலங்கையில் இருந்து கொண்டே தானிருக்கும். அதனை ஈழத் தமிழர் தரப்பு எப்படி கையாள்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஈழத் தமிழரின் எதிர்கால அரசியலும் அவர்களின் வாழ்வும் அமையும்.

இந்திய உளவமைப்பான ''றோ' தான் புலிகளை  அழித்து முடித்தது என்கிறீர்களா?

இல்லை  வேறு பல நாடுகளோடு இந்திய உளவமைப்பும் சேர்ந்தே அழித்தது.  இலங்கையரசோடு சேர்ந்து இந்தியா மட்டுமே புலிகளை அழித்து முடித்ததாக எங்களில் பலர்   நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில்  புலிகளை அழித்து முடிக்க அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும் வழங்கி அவர்களது சர்வதேச ஆயுத வழங்கல்களை தடுத்து  நிறுத்தி புலிகளின் வானொலித் தொடர்புகளை ஒட்டுக் கேட்டு, அவர்களது கனரக ஆயுத நகர்வுகளை கண்காணித்து   அனைத்தையும் உடனுக்குடன் இலங்கையரசிற்கு தெரியப் படுத்தி இலங்கை அரசு புலிகளை அழிக்க பேருதவி செய்தது அமெரிக்காவும் கனடாவுமே ஆகும்.  மேலும் நேரெதிர் முரண்பாடுகளைக் கொண்ட இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கியூபா, சீனா, ஜப்பான் என உலகமே ஓரணியில் திரண்டு இலங்கையரசிற்கு தேவையான அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து புலிகளை அழித்து முடித்தார்கள். ஆனால் இவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என நினைக்கிறேன்.  தங்களிற்கான குழியை புலிகள் தாங்களே தோண்டியிருந்தார்கள்.

நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக செய்த வேலைகளை  கூறுங்கள் ?

புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சியை முடித்த பின்னர்  இயக்கத் தலைமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரிற்கு வெடிபொருட்கள் பற்றிய விசேட பயிற்சிகள் கொடுக்கப் பட்டது. அதில் நானும் ஒருவன். அது பற்றிய பயிற்சி முடிந்ததும்  ஈழத்திற்கு திரும்பிய நாங்கள் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான  வெடி பொருள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த அப்பையா அண்ணையோடு இணைந்து மானிப்பாய் பகுதியில் ஒரு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கி அங்கு இயக்கத்திற்கு தேவையான கண்ணி வெடிகள், கைக்குண்டுகள், பொறி வெடிகள் எறிகணைகள் என அனைத்து வெடிபொருட்களையும் தயாரிக்கத் தொடங்கியிருந்தோம். முதன் முதலாக ஒரு விமானத்தையும் தயாரித்து பரிசோதனை பறப்புக்களும் செய்திருந்தோம்.பின்னர் 1987 ம் ஆண்டு இந்தியப் படையின் வருகையோடு விமானம் செய்யும் முயற்சிகள் கைவிடப் பட்டது மட்டுமல்ல அந்த தொழிற்சாலையும் இந்தியப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அடுத்ததாக 89 ம் ஆண்டு காயமடைந்து நாட்டை விட்டு வெளியேறிய நான் வெளி நாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு பிரிவில் முக்கியமாக வழங்கல் பிரிவில் இணைந்து வேலை தொடங்கியிருந்தேன்.

புலிகளுக்கு யுத்தத்தை நடத்த தேவையான வருமானம் எங்கிருந்து வந்தது?

அனைத்து இயக்கங்களினதும்  ஆரம்ப கால  தலைமறைவு  வாழ்க்கை என்பது  மிகவும் சிரமமானதாக இருந்தது. போராளிகள் தங்கள் பணத் தேவைகளை  தங்கள் உறவுகள் மற்றும் குடும்பத்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள். பின்னர்  உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யப்  பண்ணைகளை அமைத்தார்கள். இயக்கங்கள் வளரத் தொடங்க நிதித் தேவை அதிகரித்தது. அப்போது  வங்கிக் கொள்ளைகளிலும், அரச நிறுவனங்கள்,  செல்வந்தர் வீடுகள் என கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். இதில் பிரபாகரன் கூடகுட்டிமணியோடு இணைந்து  குரும்பசிட்டி  என்னுமிடத்தில் ஒரு தனியார்  வீட்டில் கொள்ளையடித்துவிட்டு பிடிபடாமல் இருக்க ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு ஓடிய சம்பவமும் நடந்திருக்கின்றது. ஆனால் எம் மக்கள் மத்தியில் இந்தக் கொள்ளைகள் இயக்கங்கள் மீதான வெறுப்பை விதைக்கத் தொடங்கியிருந்தது. அதனால் புலிகள் அமைப்பானது கொள்ளையடிப்பதை  கைவிட்டுவிட்டு  வேறு வழிகளில் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக  சுய உற்பத்திகளாக சவர்க்காரம், விளக்குமாறு, தும்புத்தடி, குளிர்பானங்கள் என உற்பத்தி செய்து விற்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் அவற்றின் தரம் குறைந்திருந்த  காரணத்தால் மக்கள் அதனை பெரிதும் விருப்பத்தோடு வாங்கவில்லை. 84ல் ஒரு ரூபாய் சவர்க்காரத்தை விற்பதற்காக நான் ஒருவரோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பேசி உலக விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், நாம் ஏன் போராடவேண்டும் என்றும்  நா வறண்டு போகுமளவிற்கு விளக்கம் கொடுத்தும் அவர் கடைசிவரை சவர்க்காரம் வாங்கவில்லை நிலைமை இப்படியாகத்தான்  இருந்தது. அதே காலகட்டத்தில் தான் இந்தியா மற்றும் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் போன்றவர்களின் உதவி புலிகளிற்கு பேருதவியாக இருந்தது. ஆனால் புலிகளின் தேவைகள் அதிகரிக்க அவர்கள் உலகளாவிய ரீதியில் போதைப் பொருட் கடத்தலில் ஈடுபட்டு அந்த வருமானத்தில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். இலங்கையரசே உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஆயுதம் வாங்கிக் கொண்டிருந்த போது புலிகள் தங்கு தடையின்றி நவீன ஆயுதங்களை தங்கள் பணத்தில் வாங்கியதன் இரகசியம் இதுதான். அதே நேரம் வெளிநாடுகளிலும் பெரிய சிறிய வியாபார நிறுவனங்கள், கோயில்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வைத்திய சாலைகள் என வருமானம் வரும்  அனைத்தையும் பினாமிப் பெயர்களில் புலிகள் இயக்கினார்கள். 94 ம் ஆண்டுகளிற்கு பின்னர்தான் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து  பெருமளவான நிதி சேகரிப்புக்கள் புலிகளால் மேற்க்கொள்ளப்பட்டது. புலிகளிற்கு அடத்தபடியாக பெருமளவு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது புளொட் அமைப்பாகும்.

விடுதலையின் பெயரால் மனித குலத்திற்கு எதிரான போதைப் பொருட் கடத்தலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டது  அறம் கிடையாது அல்லவா?

புலிகளின் விடுதலைப் போராட்டம் என்பது முழுக்க முழுக்க ஆயுதத்தை யுத்தத்தை மட்டுமே நம்பியது. இங்கு யுத்தம் என்று வரும் போதே அங்கு அறம் அடிபட்டுபோய் விடுகிறது. யுத்தத்திற்கான ஆயுதத்தை எதிரே நிற்பவனை கொன்று எடுத்தாலென்ன கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருவனை போதைக்கு அடிமையாக்கி அந்தப் பணத்தில் ஆயுதம் வாங்கினாலென்ன எல்லாம் ஒன்றுதான் என்ற மன நிலை இருந்தது .சுருக்கமாக சொன்னால் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதைப் போலத்தான் இதுவும்.

விடுதலைப் புலிகளின் போதைப் பொருள் கடத்தலுக்கான உலகளாவிய வலைப்பின்னல் இன்று யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது?

அந்த வலைப் பின்னல் புலிகள் அமைப்பானது 2001 ம் ஆண்டு  தனது  சர்வதேச அமைப்பில் மாற்றங்களைக்  கொண்டு வந்த பின்னர் புதிதாக பொறுப்பெடுத்தவர்களின் விவேகமற்ற செயற்பாடுகளால்   இன்று சர்வதேச உளவமைப்புக்களாலும்.சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவாலும் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டதோடு அதன் பொறுப்பாளர்களும் இன்று பல நாடுகளிலும் கைது செய்யப் பட்டு சிறைகளில் வாழுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் புலிகள் அமைப்பால் செய்யப்பட்ட சகோதரப் படுகொலைகளை எப்படிப் பார்கிறீர்கள்?

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முதற் படியாக அமைந்த விவேகமற்ற  பக்கங்கள் அவை. வேகம் மட்டுமே இருந்த இளைஞர்களான  எங்களிடம் அன்று விவேகம் இருந்திருக்கவில்லை. சரியான வழிநடத்தல்கள் இருந்திருக்கவில்லை. இந்திய இலங்கை உளவுப் பிரிவுகளின் சூழ்ச்சிகளை சரியாக இனம் கண்டு அவற்றை முறியடிக்கும் ஆளுமை இருந்திருக்கவில்லை.  இவற்றின் தொடர்ச்சியே சகோதரப் படுகொலைகளிற்கு காரணங்களாக இருந்தது. ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களிற்குள் மோதிக் கொள்ளாமல் ஓரணியில் நின்று இயங்கியிருந்தால் 86 ம் ஆண்டே தமிழீழம் கிடைத்திருக்கும். இன்னொரு விடயம் சகோதரப் படுகொலைகள்  என்பது புலிகளால்  மட்டுமல்ல அனைத்து இயக்கங்களாலுமே நடத்தப்பட்டது. ஆனால் புலிகள் அதனை அதிகமாகவும் மோசமாகவும் செய்தார்கள்.


விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நீங்கள் நேரடியாக எத்தனை கொலைகள் செய்துள்ளீர்கள்?

ஏனிந்த கொலை வெறிக் கேள்வி?, நான் எனக்காக எந்தக் கொலையையும் செய்திருக்கவில்லை. நான் செய்த கொலைகள் அனைத்துமே நான் சார்ந்து இயங்கிய அமைப்பிற்காகவே செய்யப்பட்டன.  நான் நேரடியாக செய்த கொலைகள் இந்திய அமைதிப் படைக்  காலத்தில்தான் நடந்தன. இந்தியப் படைகளிற்கு எங்களை அல்லது நாங்கள் பதுங்கியிருக்கும் இடங்களை.   எங்களிற்கு உணவளித்து எம்மை பாதுகாத்தவர்களை காட்டிக் கொடுத்து இந்தியப் படைகளோடு சேர்ந்து இயங்கியவர்களை அழிக்கவேண்டிய தேவை இருந்தது. அப்படி எனது பொறுப்பில் இருந்த கிராமங்களில் பதினைந்து அல்லது பதினாறு பேர் என்னால் நேரடியாக அழிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு உயிரைப் பறிக்கும் உரிமையை, உங்களின் வார்த்தைகளில் சொன்னால் அழிக்கப்பட வேண்டியவர்களை அழிக்கும் உரிமையை விடுதலையின் பெயரில் நீங்கள் எடுத்துக் கொண்டது சரியா?

நான் இணைந்திருந்தது ஆயுதத்தால் மட்டுமே பேசத் தெரிந்த ஒரு அமைப்பு. அங்கு பட்டையும் கொட்டையும் (உருத்திராட்சம்) அணிந்து கொண்டு பஜனை பாட முடியாது. ஆயுதத்தை வைத்து ஆராதனை செய்துகொண்டிருக்க முடியாது. ஆயுதம் தூக்கிய இயக்கம் மட்டுமல்ல ஆயுதம் தூக்கிய ஒரு தனி மனிதன் ஆனாலும் அடுத்தது வன்முறை  அல்லது கொலைதான். இது உலக நியதி. உலகம் இப்படித்தான் இயங்குகிறது. சரி பிழை என்பதெல்லாம் அடுத்த கட்டம்.

ஆகவே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்களா?

இல்லை யாருடைய உயிரையும் எடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. மரண தண்டனை உட்பட. ஆனால் என்னை ஒருவன் கொல்ல வரும்போது அதனை எதிர்த்து போராட வேண்டிய தேவை  எனக்குண்டு அல்லவா?


நீங்கள் நேரடியாக செய்த ஒவ்வொரு கொலையையும் விபரிக்க முடியுமா?

இது மனம் விட்டு விபரிக்கிற ஒரு சம்பவம் அல்ல. மோசமான ஆனால் விரும்பியோ  விரும்பாமலோ  தவிர்க்க முடியாத சம்பவங்கள். ஒருவரை போட வேண்டும்[ கொலை செய்யவேண்டும்] என முடிவு செய்து விட்டால் அவரைப் பற்றிய தகவல்கள் அவரது நடமாட்டம் என்பவற்றை  திரட்டுவோம். பின்னர் ஒரு கணத்தில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது தலையை பிளக்கும் அவ்வளவுதான். சில நேரங்களில் தவறுதலான தகவல்களால் தவறுகளே செய்யாதவர்களும் தவறான முறையில் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றது.

ஒருவரை கொலை செய்யும் கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?

ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது  சங்கடத்தை அல்லது பதற்றத்தை போக்க மது அருந்தவேண்டியிருந்தது (கள்ளு) பின்னர் போகப்போக பழகிப்போனது.

விடுதலைப் புலிகள் மது அருந்த மாட்டார்கள் என கூறுவார்களே?

புலிகள் அமைப்பில் மது அருந்தக்கூடாது புகைப் பிடிக்கக்கூடாது என்பது ஒரு பொதுவான விதிதான். பிரபாகரன் தேனீர், காப்பி கூட அருந்தமாட்டார். ஆனால் பல முன்னாள்  போராளிகள் இதில் விதி விலக்காக இருந்தார்கள். களவாக புகைபிடிக்கவும் மது அருந்தவும் செய்தார்கள்.  போராளிகளிடையே சிகரற்றிக்கு 'சயன்ஸ்' என்கிற சங்கேத மொழி கூட இருந்தது.  நான் முதலாவதாக காயமடைந்த அன்று  வடமராச்சி பகுதியில் நாங்கள் பதினைந்து பேர் பல நூறு இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தோம். அன்று முழுதும் எமக்கு உணவு கிடைக்கவில்லை தென்னையில் இருந்து இளநீரைக் குடித்து தேங்காயை சாப்பிட்டதுடன் பனையில் இருந்து கள்ளையும் இறக்கிக் குடித்திருந்தோம். அன்றிரவு முற்றுகையை தகர்த்து வெளியே வரும் போது எமது போராளிகளில் பலர் இறந்து போனார்கள். நான் கடுமையாக காயமடைந்திருந்தேன். போதையில் இருந்ததானால் அதிகளவு இரத்தம் வெளியேறியதால்  மயக்கமடைந்திருந்தேன்.


நீங்கள் நேரடியாக சம்பந்தப்படாமல் மறை முகமாக சம்பந்தப்பட்ட கொலைகள் எத்தனை?

கண்ணி வெடிப் பிரிவில் இருந்ததனால்  கண்ணி வெடியை வைத்து அடிச்சிட்டு போய்க் கொண்டே இருக்கவேண்டியது தான். கணக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உங்கள் உயிர் நண்பனை கொலை செய்ததாக ஒரு முறை  கூறியிருந்தீர்கள்,  அந்தக் கணத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆம். அவன் எனது சிறு வயது நண்பன். அவனை நானே கொலை செய்தேன். அவன் வேறு இயக்கத்தில் இணைந்திருந்தான் புலிகள் அமைப்பால் அந்த இயக்கம் தடை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவில் தங்கியிருந்தவன் இந்தியப் படைகள் ஈழத்திற்கு வந்தபோது அவனும் இந்திய உளவமைப்பால் ஈழத்திற்கு அழைத்து வரப் பட்டிருந்தான். அவனை நோக்கி துப்பாக்கி நீண்டது ஒரு கணத்தில் நான் எடுத்த முடிவு. ஏனெனில் கொல் அல்லது கொல்லப் படுவாய் என்கிற கால கட்டம் அது. ஆனால் அந்தக் கொலையால் எனது மனதில் உள்ள தாக்கம் என் மரணம் வரை தொடரும். அய் மிஸ் ஹிம்.

நீங்கள் செய்த கொலைகளுக்காக எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?

தம்பி! ஒரு முக்கியமான விடயம் கொலைகள் என்பது எவையுமே எனது தனிப்பட்ட காரணங்களிற்காக செய்யப்பட்டது அல்ல. நான் செய்த கொலைகள் எல்லாமே ஒட்டு மொத்த ஈழத் தமிழ் மக்களின் விடுதலை என்று உதித்த, அந்த மக்களின் பிரதிநிதிகள் என்று செயற்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினராக இயங்கிய எனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளாகும். ஒரு இராணுவமாகட்டும், ஆயுத குழுவாகட்டும்  கட்டளைக்கு கீழ்படிதல் என்பது மிக முக்கியமானது. அதன்படி எனக்கான கட்டளைகளிற்கு நான் கீழ்ப்படிந்து இயங்கினேன். கொலைகள் என்பன எனக்கு வழங்கப்பட்ட கட்டளைகள். ஆனால் குற்ற உணர்வு என்பது இருக்கத்தான் செய்கின்றது. தினமும் அதற்காக வருந்திக் கொண்டுதான் இருக்கிறேன்.


விடுதலையின் பெயரால், விடுதலைப் புலிகள் எத்தனை சக தமிழர்களை கொலை செய்து இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

அதுபற்றிய சரியான தரவுகள் யாரிற்கும் தெரியாது என நினைக்கிறேன். நான் உட்பட.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார அமைப்பு என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?

ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் அமைப்புக்களுமே கொலைகளை செய்த அமைப்புக்கள்தான். அதில் விடுதலைப் புலிகள் விதி விலக்கல்ல.

நீங்கள் உலகத்தில் அதிகம் நேசிப்பவர் யார்?

எனது மகள்.

உங்களின் மகளை நீங்கள் நேசிப்பது போல நீங்கள் கொலை செய்தவர்களை சில உயிர்கள் நேசித்திருப்பார்கள், நேசிப்பவர்களை கொலை செய்தது மூலம் அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது சரியா?

தவறுதான்.  இதற்கான  பதிலை ஏற்கனவே கூறிவிட்டேன். அதாவது கட்டளைகளிற்கு கீழ்படிதல். இன்றும் நான் செய்த கொலைகளுக்காக மிகவும் வருந்துகிறேன்.


நீங்கள் கொலை செய்த ஒருவரின் உறவினரை, அல்லது நீங்கள் கொலை செய்த ஒருவரை  நேசிப்பவரை  சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

சொல்லத் தெரியவில்லை.

புலிகள் அமைப்பானது இலங்கை இந்தியா தவிர்ந்து வெளி நாடுகளிலும்.குறிப்பாக பிரான்சிலும் சில கொலைகளை செய்ததாக அறிய முடிகிறது அதைப் பற்றி சொல்ல முடியுமா?

பிரான்சில் மாத்திரம் சபாலிங்கம், நாதன் , கஜன் என மூன்று பேரை புலிகள் கொலை செய்துள்ளார்கள்.

சாபாலிங்கம் புலிகளால் கொல்லப் படவில்லையென்று நீங்களே முன்பு சில இடங்களில் மறுத்திருக்கிறீர்களே?

உண்மைதான் காரணம் அன்று புலிகள் அமைப்பு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது அதற்கென பல தேவைகளும் நோக்கங்களும் இருந்தது. அதன் காரணமாக புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சபாலிங்கம்  புலிகளின் அன்றைய சுவிஸ் பொறுப்பாளரின் வழிநடத்தலில் கொல்லப்பட்டார். அந்த சுவிஸ் பொறுப்பாளர் இப்பொழுது வேறொரு நாட்டில் வசிக்கிறார். அதனை புலிகள் தாம் செய்யவில்லையென மறுத்ததோடு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த என் போன்றவர்களிற்கும் சபாலிங்கத்தின் கெலையை மறுக்கும்படி உத்தரவு கிடைத்திருந்தது. ஆனால் இன்று புலிகளோ அவர்களின் தேவைகளோ நோக்கங்களோ எதுவும் இல்லாத காரணத்தால் நான் அதனை மறுத்துக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை. சபாலிங்கத்தை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான்.

நாதன், கஜன் கொல்லப் பட்டதற்கான காரணங்கள் தெரியுமா?
உண்மையில் நாதன்தான் புலிகளில் இலக்கு. காரணம் நாதனே புலிகளின் பிரான்சிற்கான நிதிப் பொறுப்பில் இருந்தவர். இவர் புலிகளின் பெருமளவு நிதியை கையாடல் செய்ததால் பல தடைவை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளரால்  எச்சரிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தொடர்ந்தும் நிதி கையாடல் செய்ததால் அவரை பாரிசில் வைத்து புலிகள்  கொலை செய்தனர். ஆனால் அவரோடு கூடவே நின்றிருந்த கஜன் கொலையாளியை அடையாளம் கண்டுவிட்டிருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.


விடுதலைப் புலிகள் அமைப்பு அழிந்து விடும் என, அதன் அமைப்பில் அங்கத்தவராக இருந்த காலங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

இல்லை கனவிலும் நினைத்திருக்கவில்லை. புலிகள் அமைப்பு மிகத் திறமையான போராளிகளின் வீரத்தாலும், தியாகங்களாலும் திறைமைகளாலும் நன்கு திட்டமிடப்பட்டு சிறுகச் சிறுக கட்டியமைக்கப்பட்டதொரு விடுதலை அமைப்பு. ஒற்றைக் கைத் துப்பாக்கியோடு தொடங்கப்பட்டு ஆட்லெறிகள்.பல குழல் எறிகணைகள், ஏவுகணை, விமானம் என கண் முன்னாலேயே வளர்ந்து நின்ற இயக்கம். இப்படி அழிந்து போகும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்விக்கு பிரதான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன?

அதற்கு நிறைய அக  புற காரணிகள் உள்ளன.பிரதான காரணங்களில் முதலாவது சர்வதேச அரசியல் ஓட்டத்தை சரியாக கணித்து அதற்கேற்ப சில ராஜதந்திர நகர்வுகளை செய்து புலிகள் தங்களிற்கானதொரு  நெளிவு சுழிவு அரசியலை செய்யாதது. இரண்டாவது, புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அவர்கள் ஒரு நிழல் அரசை அமைக்கத் தொடங்கியபோது இயக்கத்தினுள் எழுந்த அதிகார குழுக்கள்  தங்களில் யார் அதிகம் பிரபாகரனை புகழ்ந்தும் போற்றியும் அதிக அதிகாரங்களை தங்கள் கைவசப்படுத்த முயல்வது என்பதில் போட்டியிட்டனர். இந்தப் புகழ்ச்சிகளிற்கு  இறுதிக் காலங்களில் பிரபாகரனும் மயங்கத்  தொடங்கியிருந்தார் என்பது கவலைக்குரிய விடயம். இந்த அதிகாரக் குழுக்களில் முக்கியமானவை வெளிநாட்டு பிரிவுகளை கையகப்படுத்திய கஸ்ரோ தலைமையிலான அனைத்துலகச் செயலகம். மற்றும்  சூசை தலைமையிலான கடற்புலிகள். இந்த அதிகாரப் போட்டியில் அதுவரை உண்மையாக  விசுவாசத்தோடு உழைத்த தலைமையை புகழ்ந்து கொண்டிருக்காமல் மக்கள் விடுதலையை முன்வைத்து வேலை செய்த பல  மூத்த போராளிகள்  அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் . வெளிநாட்டு கட்டமைப்பு பொறுப்பாளர் கே.பி. போன்றவர்கள் உட்பட பலர் புலிகள் இயக்கத்தை விட்டு தூக்கியெறியப்பட்டனர். அதே போல 2001 ம் ஆண்டு என்னையும்  புலிகளின் தலைமை வெளியேற்றியது.


சூசை தலைமையிலான கடற்புலிகள் அமைப்பு விட்ட தவறு என்ன?

சூசை தலைமையிலான கடற் புலிகளின் தவறு என்று சொல்லமுடியாது, சூசையின் பேராசை என்றுதான் சொல்லவேண்டும். புலிகளின் கே.பி கம்பனியின் சர்வதேச வலையமைப்பில் 96 களிற்கு முன்னர் இருந்த  பெரும்பாலானவர்கள் சம்பளத்திற்கு பணிபுரிபவர்களாகவே  இருந்தனர். ஆனாலும் அவர்கள் விசுவாசத்தோடும், நேர்மையாகவும்  வேலை செய்தனர். 96 களின் பின்னர் பெருமளவான பயிற்றப்பட்ட கடற்புலிகள் சர்வதேச வலையமைப்பில் இணைக்கப் பட்டனர். சர்வதேச கடலோடிகளில் பெரும்பாலானவர்கள் கடற்புலிகளாக இருந்தார்கள். ஆனால் ஆயுதச்சந்தை முகவர்களுடான தொர்புகள், பேரம் பேசுதல் என்பன  பழையவர்களிடமே இருந்தது. ஆனால் சூசையோ  கப்பல் ஓடத் தெரிந்து விட்டால் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கிவிடலாமென நினைத்தார். அதனால் பல குழுக்களாக இயங்கிய சர்வதேச வலையமைப்பை மொத்தமாக பறித்தெடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார். அதுவரை  பல நவீன ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு போய் சேர்த்தவர்களை  ஒட்டு மொத்தமாக நீக்கி சூசை பொறுப்பெடுத்த பின்னர் ஒரு ஆணியைக் கூட சூசையால் வன்னிக்குள் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லையென்பது சோகமான உண்மை.

இறுதி போரின் முடிவை எப்படிப் பார்கிறீர்கள்?


30 ஆண்டுகாலம் இடைவிடாத யுத்தம் முடிவிற்கு வந்தது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த 30 ஆண்டு காலம் ஈழத் தமிழினம் கொடுத்த விலையின் பலாபலன் என்னவென்று பார்த்தால் எதுவும் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். உயிரிழப்புக்களை  தவிர்த்து எமக்கான தீர்வுகளை  பெற்றுக் கொள்க்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் புலிகள் அமைப்பு அதனை சரியாக தமக்கு சாதகமாக பயன்படுத்தாமல் நழுவ விட்டது. இன்று அந்த அமைப்பும் முழுதாக அழிந்துபோனதோடு ஈழத் தமிழ் மக்களையும் ஒரு அரசியல் சூனியத்திற்குள் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இதிலிருந்து தமிழினம் மீண்டு வருவதற்கு பல காலங்கள் எடுக்கும். ஈழத் தமிழ் மக்களை சரியாக வழி நடத்தும் ஒரு தலைமையும் அமையவேண்டும். அமையுமா என்பது கேள்விக் குறிதான்?.
தொடரும்...

Friday, 10 January 2014

நான் சந்தித்த மிக அழகிய பெண்

சகோதரி ஹசீனா ஆசிட் வீச்சுக்கு பின்
ஹசீனா ஹுசைன் [Haseena Hussain ] நான் எனது வாழ்வில் சந்தித்த மிகவும் அழகிய பெண்,ஒருதலைக் காதலை நிராகரித்தால் இவர் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்களுக்கு எதிராக இந்தியாவில் நாளாந்தம் நடை பெறும் வன்முறைகளில் ஒன்றான அசிட் வீச்சால் சகோதரி ஹசீனா ஹுசைன் இழந்தவை 

1]அவரின் இரு கண்கள் ,கண் இமை  

2]மூக்கு

3]உதடுகள் 

4]உடலில் தலை முதல் பாதம் வரை முழுவதும் உருகிய தீக் காயங்கள் 

5]மண்டையோட்டில் 35% ஆழமான காயம் 

6]உடல் முழுவதும் 35% ஆழமான காயம் 

இவரின் கழுத்து உள் எலும்புகள் முழுமையாக தெரியும் அளவிற்கு உருகி உள்ளது 

அவர் உடலின் மொத்தமாக 65% தீக்காயத்திற்கு ஆளாகியுள்ளது,நம்ப வேண்டும் அவர் இதுவரை காலமும் மேற்க் கொண்ட சத்திர சிகிச்சையின் அளவு 35,ஆனால் மனம் தளராமல் இன்னமும் நீதிக்காகவும்,தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போராடி வரும் சகோதரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாத்திரமல்ல இதை வசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே 'கிரேட் ரோல்' மாடல் அவரை அவரின் பெங்களூர் வீட்டில் சந்தித்தேன்.மிகுந்த மனப்போராடங்களை எனக்குள் ஏற்படுத்திய சந்திப்பு அது,சந்திப்பு நிகழ்ந்து பல நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் நினைவுகள் இன்றுவரை எனது ஆன்மாவை உலுக்கி ஆணாகப் இருப்பதன்  அடிப்படையை கேள்வி கேட்கின்றன ,எனது பத்திரிகை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச் சிறந்த நபர் சகோதரி ஹசீனா.    

1]அந்த துன்பகரமான நாளில் என்ன நடந்தது ...?

நான் அப்போது பெங்களூர் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன் ,கூடவே தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்துகொண்டு இருந்தேன் ,அங்கே எனக்கு முதலாளியாக இருந்தவர் தான் இந்தக் கொடிய செயலை செய்த ஜோசப் ரோட்ரிக்கஸ்[ joseph rodrigues] ..அவர் இந்திய விமானப் படையின் ஒரு அதிகாரி கூட பல தடவைகள் அவர் காதலை எனக்கு சொல்லிப் பார்த்தார்.. நான் அதை ஆமோதிக்க வில்லை ,ஏன் என்றால் காதல் என்பது எனது சொந்த விருப்பம் ,அது எனது மனம் சார்ந்தது ,எனது விருப்பம் எனது பெற்றோரின் விருப்பம்  சார்ந்தது ,அவர் என்னை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார்,நான் அவரின் தொல்லை தாங்காமல் அந்த தனியார் நிறுவனத்தை விட்டு வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்...எனது புது வேலைத் தளத்துக்கும் வந்து அவர் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தார்...நான் காதலிக்க முடியாது என கண்டிப்பாக மறுத்து வந்தேன் ...நான் அவருக்கு கிடைக்க மாட்டேன் என தெளிவாக தெரிந்தபின் ஒரு நாள் நான் எனது வேலைத் தளத்துக்கு நான்  நடந்து செல்லும் போது என்னை வழிமறித்த அவர் ஒரு பக்கெட்டில் கொண்டு வந்த 2 லீட்டர் செறிவூட்டிய   சல்பூரிக் அமிலத்தை  எனக்கு மேல் குளிப்பாட்டுவது போல ஊற்றிசென்றார் ,எனக்கு மேல் ஊற்றும் போது அவர் சொன்னார் 

"எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்குமே கிடைக்க கூடாது" 

,அவரின் ஒருதலைக் காதலால் அந்த நொடியில் இருந்து நான் இழந்தது அதிகம் எனது பார்வை  உட்பட 
சகோதரி ஹசீனா ஆசிட் வீச்சுக்கு முன்

2] அவர் மனநிலை பாதிக்கப் பட்டவரா...?

அவரு கீழ் வேலை செய்தவள் எனும் வகையில் நிட்சயமாக சொல்லுவேன்,அவர் மனநிலை பாதிக்கப் பட்டவர் இல்லை ,நான் முன்பே கூறியது போல அவர் விமானப் படையில் ஒரு அதிகாரி ,மனநிலை பாதிக்கப்பட்டவர்களை விமானப் படை வேலைக்கு சேர்க்காது ,மேலும் அவர் ஒரு பட்டதாரி  ...

3]அவர் அசிட் வீசிய போது அங்கே நின்றிருத்த மக்களின் வெளிப்பாடு [reflection]  எவ்வாறு இருந்தது ...?

நீர் ஊற்றுங்கள் நீர் ஊற்றுங்கள் என நான் கதறினேன் ,யாருமே நீர் ஊற்ற முன் வரவில்லை...நீர் ஊற்ற முன் வந்தவர்களைக் கூட நீர் ஊற்ற வேண்டாம் ,ஊற்றினால் நீ காவல் நிலையம்  சென்று சாட்சி சொல்ல வேண்டும் எனக் கூறி சிலர் தடுத்தனர் , நீர் ஊற்றலாமா வேண்டாமா என விவாதங்கள் செய்தனர் ,ஆனால் அசிட் காயங்களுக்கு ஓடும் நீர் ஊற்ற வேண்டும் என்ற அடிப்படை தெளிவு அங்கிருந்த யாருக்குமே இருக்கவில்லை ,அதற்குள் எனது உடலின் 65% முழுமையாக கருகி விட்டது,இதில் உள்ள முரண் நகைச் சுவை என்னவென்றால் எனது நிலை கன்னட மீடியாவிற்கு தெரிய வந்து அது ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய பின்பு எனக்கு பலர் உதவ முன்வந்தனர் ,ஆனால் நான்   அசிட் வீச்சுக்கு  ஆளாகி தெருவிலே இருந்து துடித்துக் கொண்டிருந்த போது எனக்கு நீர் ஊற்றக் கூட யாருமே முன் வரவில்லை...இந்த உலகம் விநோதமானது பிரதர் 

4]இந்தியாவில் அதிகளவு ஆசிட் வீச்சு சம்பவங்கள் பெண்களுக் கெதிராக நடப்பதற்கு என்ன காரணம் என நினைகிறீர்கள் ...?

ஒரு பெண் காதலை ஏற்றுக் கொள்கிறாள் இல்லை என்றால் ,அது சாதாரண தனிமனித விருப்பம் சார்ந்தது என பெரும்பாலான ஆண்கள் சிந்திப்பது இல்லை ,அதை தமக்குக் கிடைத்த பெரிய அவமானமாக தோல்வியாகப் பார்கின்றனர்...போயும் போயும் ஒரு பெண்ணிடம் தோற்று விட்டேன்  என ஆண்கள் சிந்திபதற்குப் பின்னால் ,காலம் காலமாக பெண்களை அடிமைப் படுத்தி வாழ்ந்த ஆணாதிக்க மனநிலை உள்ளது ...இந்திய ஆண்களில் பெரும் பாலானவர்கள் பெண்களை ஒரு உயிர் உள்ள ஒரு ஜீவனாகப் பார்பதற்கு தயாராக இல்லை ..அவளை ஒரு பண்டமாக பொருளாக தான் பார்க் கிறார்கள்....ஒரு இந்திய ஆண் வளர்ந்த முறையையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் ஆண் பிள்ளையும்   பெண் பிள்ளையும் உள்ள குடும்பத்தில் கூட ,ஆணுக்கும் பெண்ணுக்கும் நாம் சம உரிமை கொடுக்கிறோமா என்ன...?,ஆண் பிள்ளை எல்லாம் செய்யலாம் பெண் நீ எல்லாம் செய்யக் கூடாது என எமது வேறுபாட்டை நாம் குடும்பம் எனும் அமைப்பிலேயே தொடங்கி விடுகிறோம் ....பெண்கள் பலவீனமானவர்கள் ,அவர்கள் ஆண்களை சார்ந்துதான் இருக்க வேண்டும் என சொல்லித்தருகின்ற எமது சமூக அமைப்பு பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு பொறுப்பு கூற வேண்டும்    

"எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்குமே கிடைக்க கூடாது" எனக் கூறி அவர் எனக்கு மேல் அசிட் வீசினார் என்றால் ,ஆண்கள் எதுவும் செய்யலாம் என்று சொல்லி தந்த எமது சமூகத்தின் மிகப் பெரிய தோல்வி அங்கே உள்ளது ,ஆசிட் வீச்சுப் போன்ற கொடிய செயல்களை பெண்களுக்கு செய்யும் ஆண்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் நாமும் உங்கள் மீது ஆசிட் வீச எவ்வளவு நேரமாகும் ,பெண்களும் எவ்வளவு காலம் தான் பொறுப்பார்கள் ...?, 

இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு மிக சிறியளவு தண்டனையே கொடுக்கிறார்கள்,வாழ்க்கை வெறுத்துப்போன ஒரு கட்டத்தில் நாமும் அதை அனுபவிக்க தயாராக தான் இருப்போம்... 

5]பெண்கள் மீதான வன்முறைகளிற்கு பெண்களையே காரணம் கூறும் மனநிலையை எப்படிப்பார்க்கிறீர்கள்? 

 உலகிலேயே இந்தியாவில் தான் குற்றம் செய்தவர் இருக்க பாதிக்கப் பட்ட பெண் மீது  அபாண்டமாக குற்றம் சாட்டும் பொதுப் போக்கு உள்ளது....தவறு செய்தவர் இருக்க ,பாதிக்கப் பட்டவர் மீது குற்றம் சுமத்தும் போக்கு மிகவும் ஆபத்தானது ...டெல்லி பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் கூட அந்தப் பெண் ஏன் இரவு நேரத்தில் வெளியே சென்றார் என சில புத்தி ஜீவிகள் கேள்வி கேட்டனர்..எனக்கு அசிட் வீச்சு நடந்த போது கூட இவள் என்ன தப்புப் பண்ணினாளோ என எனது காது படும் படியாக சிலர் பேசினர்...சகோதரி வினோதினி விடயத்தில் கூட அவரை குற்றம் சுமத்தி சிலர் பேசியுள்ளனர் ,இந் நிலை மாற்றப் படவேண்டுமாயின் சமுதாயத்தின் ஒட்டு மொத்த அடிப்படை சிந்தனை இயல்பும் மாற்றப் பட வேண்டும் ... 

பெண்கள் பாலியல் வன் புணர்வுக்கு உள்ளாகுவதற்கு அவர்களின் உடை காரணம் என சிலர் பெண்கள் மீது பழி சுமத்துகின்றனர் ....எனது கேள்வி நித்தம் நித்தம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் படும் மூன்று வயதுப் பெண்கள்,ஜந்து வயதுப் பெண்கள் எல்லாம் குட்டைப் பாவாடையா அணிகிறார்கள் ....?,பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பெண்கள் மீது குற்றம் சுமத்துதல் என்பது   பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விட   ஆபத்தானது...அதனால் தான் சொன்னேன் சமுதாயத்தின் ஒட்டு மொத்த அடிப்படை சிந்தனை இயல்பும் மாற்றப் பட வேண்டும் என்று 

6]பெண்களுக்கு மேல் கொடிய வன்முறைகளை பிரயோகிபவர்களுக்கு மரண தண்டனையை ஆதரிக்கிறீர்களா..?

இல்லை ,நிட்சயமாக இல்லை ...35 சத்திர சிகிச்சை ,65% எரி காயத்துடன் நான் பட்ட அவஸ்தையை குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் தீர்க்க முடியுமா ...?மரணம் என்பது ஒரு நிமிட அவஸ்தை ,பெண்கள் மீது கொடிய வன்முறைகளை பிரயோகிப்பவர்கள்,காலம் முழுவதும் அதற்காக அனுபவிக்க வேண்டும்...அவர்களுக்கு காலம் முழுவதும் ஆயுள் தண்டனையை நான் ஆதரிக்கிறேன்....ஒரு தவறும் செய்யாத நானும் எனது தாய் தந்தை தங்கை ,காலம் முழுவதும் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் என்றால் குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது...என்னால் வெளியில் எங்குமே செல்ல முடியாது...கண் பார்வை எனக்கு சுத்தமாக இல்லை ...அதிக நேரம் என்னால் இருக்கக் கூட முடியாது,65% எரி காயம் ,35 சத்திர சிகிச்சை .... நான் என்ன பாவம் செய்தேன் ...குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எனது கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்...? 

7]வாழ்வதற்குப் பதில் இறந்து இருக்கலாம் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா....?

இல்லை,why should i..?,அசிட் பட்டு நான் தெருவிலே துடித்துக் கொண்டிருந்த போது கூட என்னைக் காப்பாற்றுங்கள்..நான் வாழ வேண்டும் என்றுதான் கதறினேன்...ஒரு வருடம் முழுமையாக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது கூட என்னைக் காப்பாற்றுங்கள்..நான் வாழ வேண்டும் என்றுதான் என்றுதான் நான் கூறினேன் ....எனக்கு அசிட் ஊற்றியவன் நான் வாழக் கூடாது என நினைத்தான் ,நான் அவனுக்கு வாழ்ந்து காட்ட  வேண்டும் என நினைத்தேன்...தவறு செய்த அவனே வாழும் போது எந்த தவறும் செய்யாத நான் ஏன் இறக்க வேண்டும் ...?,14 வருடங்கள் கழித்த  பின்னும் கூட இன்றுவரை வாழ்கிறேன்  

8]பெண்ணாகப் பிறந்ததுக்கு எப்போதாவது கவலைப் பட்டு யுள்ளீர்களா..?

அல்லா ,என்னை பெண்ணாகப் படைத்தார் அதற்கு நான் பெருமைப் படுகிறேன் ..கர்வப் படுகிறேன் ..என்னை பெண்ணாக படைத்ததற்கு நான் என்றுமே அல்லாவுக்கு நன்றி உடையவள் ஆகி இருக்கிறேன்...எனது இரண்டு கண்களும் இல்லாமல்ப் போனதில் எனக்கு சிறு வருத்தம் ஒரு கண் ஆவது இருந்திருந்தால்  அநியாயம் செய்பவர்கள் மீது நான் ஏதாவது செய்து இருக்கலாம் ,அது ஒன்றுதான் எனக்கு கவலை வேறு எதுவுமே இல்லை ..   

9]நீங்கள் நம்பிய கடவுள் மீது உங்களுக்கு வாழ்வின் எந்த நிலையிலும் கோபம் வர வில்லையா ..?

இல்லை,மனிதன் விடும் தவறுகளுக்கு நாம் எப்படி கடவுளை குற்றம் சொல்லலாம்...?,அல்லா அனைவருக்குமே புத்தியை கொடுத்துள்ளான்...அந்த கொடிய சம்பவத்துக்குப் பிறகும் இன்றும் நான் வெற்றி கரமான பெண்ணாக உயிர் வாழ்கிறேன் என்றால் அந்த மன வழியை எனக்கு கொடுத்தது அல்லா ,எனது அம்மா அப்பா மற்றும் எனது தங்கை 

10]ஆசிட் வீச்சின் பின் சமூகத்தின் எதிர் வினை எவ்வாறு இருந்தது ...?

சமூகத்தில் சிலர் என்னை தவறு சொன்னார்கள் ..ஆசிட் வீசும் அளவுக்கு இவள் என்ன செய்து இருப்பாள் என விதண்டாவாதம் கதைத்தனர்...முக்கியமாக எனது உறவினர்கள் என்னை படிக்கச் வைத்தது தவறு எனக் கூறினர்...எனது நிலையை வைத்திய சாலையில் வந்து பார்த்த சில உறவினர்கள் நான் உயிர் வாழ்வதற்கு இறந்து போகலாம் எனக் கூறினர்...நான் உயிர் தப்ப முடியாது என நினைத்து மஜிஸ்ரேட் என்னிடம் மரண வாக்கு மூலம் கூட பெற்று விட்டார்..அப்போதும் எனது உறவினர்கள் நான் இறந்து  போவது நலம் எனக் கூறினர் ...ஆனால் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் ...போராடுகிறேன் என்றால் அதற்குப் பின் பெரிய மன வலிமை உண்டு 


12]பெண்கள் மேல் நிகழ்த்தப்படும் இவ்வாறான கொடிய வன்முறைகளுக்கு தீர்வே இல்லையா ...?சட்டங்கள் மாற்றப் பட வேண்டுமா ..? 

பாதிக்கப் பட்ட பெண்ணாக என்னிடம் சில தீர்வுகள் உள்ளன 

1]சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும் 

2]குற்ற வாளியின் பார்வையில் ,பாயிண்ட் ஒப் வியூவில் சட்டத்தைப் பார்ப்பதை தடுக்க வேண்டும் ,உதாரணமாக   குற்றவாளிக்கு குழந்தை உண்டு,வயதான தாயார் உண்டு என எல்லாம் சொல்லி அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை இந்தியாவில் உண்டு ...அப்படி என்றால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு குடும்பம் இல்லையா ...?  குற்ற வாளியின் பாயிண்ட் ஒப் வியூவில் சட்டத்தைப் பார்க்காமல் பாதிக்கப் பட்டவரின்  பாயிண்ட் ஒப் வியூவில்   இருந்து சட்டத்தைப் பார்க்க வேண்டும்  

3]ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் தண்டனை என்று கொண்டுவர வேண்டும்..சும்மா பேச்சுக்கு 14 வருடம் சிறையில் வைத்திருப்பது எல்லாம் சுத்த அபத்தம் 

4]வழக்குகள் விரைவில் விசாரித்து தீர்வு கொடுக்கப் பட வேண்டும் 

5]ஆயிரம் குற்ற வாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது எமது சட்டத்தின் அடிப்படை ....ஆயிரம் குற்ற வாளிகளும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தண்டிக்கப் பட வேண்டும் 

11]கர்நாடகாவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு அமைப்பு இயங்குவதாகவும் நீங்கள் அதில் தொழிற்ப்பட்டு வருவதாகவும் அறிகிறேன்..?,அதைப் பற்றி கூற முடியுமா ...?

கர்நாடகாவில் அசிட் வீச்சால் பாதிக்கப் பட்டவர்களுக்காக  CSAAAOW
Campaign and Struggle Against Acid Attacks on Women]

 எனும் அமைப்பு இயங்குகிறது, இது இந்தியாவிலே கர்நாடகாவில் மட்டும் தான் அசிட் வீச்சால் பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு அமைப்பு இயங்குகிறது..அசிட் வீச்சு என்பது இப்போது தேசிய  பிரச்சனை என்பதால் இளம் சந்ததியினர் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முன் வர வேண்டும்.தனியே பாதிக்கப் பட்ட பெண்கள் மாத்திரம் அல்லாமல் அனைவருமே குரல் கொடுக்க முன் வர வேண்டும்..உங்களுடன் இணைந்து பெண்களுக் கெதிரான வன்முறைக்கு எதிராக போராட நான் எப்போதும்  தயாராக உள்ளேன்.வாருங்கள் நண்பர்களே பெண்களுக் கெதிரான வன்முறைகளுக்காக நாம் கை கோர்த்துப் போராடுவோம் ....